Wednesday, January 25, 2006

தேர்தலே கடந்து போ

தமிழகத்தில் தேர்தல் ஜூரம் துவங்கி விட்டது. அரசு அதிகாரிகள், பொதுமக்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி திடீரென்று திருந்தி நல்ல பிள்ளையாகி விட்டது ஆளும் ஜெயலலிதா அரசு. ஞாபகமறதி அல்லது மன்னிக்கும் குணத்திற்கு பெயர் போன நமது மக்களும் அரசின் தவறுகளை மன்னித்து அதற்கு பொது மன்னிப்பு தந்து விட்டார்கள் என்றே அவர்களது மனப்போக்கும் கருத்துக்கணிப்புகளும் எடுத்துக் காட்டுகின்றன.

எதிர்க் கூட்டணியையும் அதன் மூலம் கலைஞரையும் கலகலக்க வைக்கும் நோக்கில் அடுத்தடுத்து பல அதிரடி மூவ்களை செய்து வருகிறார் ஜெயலலிதா. அவரின் சில தந்திரங்கள் பலிக்க ஆரம்பித்த்துள்ளன என்பதனை மதிமுகவின் திடீர் மனமாற்ற நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன. சூட்டோடு சூடாக கேபிள் தொலைக்காட்சி வழங்கும் சில எம் எஸ் ஓக்களை கைப்பற்றும் நடவடிக்கை என்று சன் டிவி குழுமத்தின் சுமங்கலி கேபிள் விஷன் மீது குறிவைத்து தனது தாக்குதலை தொடங்கியிருக்கிறார். இது ஏன் மக்களால் வரவேற்கப்படும் என்பதையும் பல்வேறு அறிக்கைகள் மூலம் விளக்கி இது ஒரு ஜனரஞ்சகமான முடிவு என்பதையும் கூறி வேட்டு வைத்துள்ளார். தமிழகத்தில் அதிக பேரால் வாசிக்கப்படும் காலை நாளிதழான தினத்தந்தியின் ஆதரவும் ஜெயலலிதாவுக்கு கிடைத்து இருப்பதால் இந்த முடிவு நிஜமாகவே மக்களுக்கு பயனளிக்கக் கூடிய ஒன்று என்பதை மக்களும் நம்பத் தொடங்கி விட்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சியினரும் இதனை போன்றே தனியார் வசம் இருக்கும் பல துறைகளும் அரசு வசம் வர வேண்டும் என்று கிளம்பி விட, பாவம் கலைஞர் அவர் அவசர அவசரமாக கவர்னரை பார்த்த விஷயம் கூட இப்போது உரிமை மீறல் பிரச்சினையாக நிற்கிறது.

நெல்லிக்காய் மூட்டை அவிழ்ந்து விடுமோ என்பது போன்று கவலை கலைஞருக்கு. ஒரு பக்கம் விஜயகாந்த் இவரை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தினாலும், அவருக்கு கூடும் கூட்டத்தை வைத்து இவர் அவசரப்பட்டு கருத்து கூறாமல் அடக்கி வாசிக்க வேண்டியிருக்கிறது. இன்னொரு புறம் , ‘குறைவாக கொடுத்தால் தானே கூட்டணி மாறுவார்கள், இதுவரை அவர்கள் இந்த கூட்டணியில் தான் இருப்பதாக கருதுகிறேன்’ என்று மதிமுகவினை யோசனையுடன் பார்க்க வேண்டியிருக்கிறது. திடீரென்று பாமக எம் எல் ஏக்கள் 2 பேர் அதிமுகவில் சேர்ந்திருப்பதாலும், நுழைவுத்தேர்வு ரத்து என்ற நீண்ட நாளைய பாமக கோரிக்கை நிறைவேறியிருப்பதாலும் பாமக நமது அணியிலேயே தொடருமா? என்பதிலும் அப்படியே அவர்கள் கூட்டணியில் இருக்க சம்மதித்தாலும் எக்கச்சக்கமான இடங்களை கேட்காமல் இருக்க மாட்டார்களே என்ற கவலை ஒருபுறம். சென்ற பாராளுமன்ற தேர்தலை அடுத்து பிரச்சினையல்லாமல் அடுத்த சட்டமன்ற தேர்தலில் நாம் தான் ஆட்சியை பிடிப்போம், ஸ்டாலினுக்கும் நல்ல அரசியல் அடித்தளம் அமைத்துக் கொடுக்க இயலும் என்று நினைத்தார். ஆனால் நினைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு, அதனாலே முழிக்குது அம்மா கண்ணு என்பதை போல இப்போது கணக்குகள் மாறியதால் சிந்தனை செய்கிறார்.

இது இப்படியென்றால் பாமக என்ன நினைக்கிறது என்றே தெரியவில்லை. ஏனென்றால் திடீரென்று மீடியாக்களுக்கு எதிராக தாங்கள் நடக்கவில்லை என்று பேட்டி அளித்து சினிமா போராட்டங்களுக்கு ஒரு திடீர் முற்றுப்புள்ளி வைத்தார். தாங்கள் உறுதியாக திமுக கூட்டணியில் தான் இருப்போம் என்று அவர் கூறியிருந்தாலும் யாருமே அவரை முழுமையாக நம்பாததில் அவருக்கு எரிச்சல் இருக்கிறது. இதனிடையே வட மாவட்டங்களில் பாமக வாக்குகளை கணிசமாக விஜயகாந்த் பிரிப்பார் என்று வரும் கணிப்புகளை கண்டு கொள்ளாதவர் போல் இருக்கிறார். அந்த அளவில் முழுமையாக எண்ண ஓட்டத்தினை புரிந்து கொள்ள முடியாத கட்சியாக இருப்பது பாமக மட்டுமே.

மதிமுக ஏறக்குறைய அதிமுக கூட்டணிக்கு வந்து விடும் என்றே சகிம்ஞைகள் தெரிவிக்கின்றன. மதிமுக 2ம் கட்ட தலைவர்கள் எல்லாம் கட்சிகள் குறைவாக இருக்கும் அதிமுக கூட்டணியில் அதிக இடங்கள் கிடைக்கும் என்று கணக்கு போடுகிறார்கள். இப்போது அரசுக்கு ஆதரவும் பெருகி இருப்பதால் இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கருதுகிறார்கள். ஈரத்துணி போட்டு எங்களை மூட முடியாது என்று பேசுகிறார்கள். அவரை ஜெ அரசு உள்ளே வைத்தது குறித்து கேட்டால் ‘கலைஞர் கொலைப்பழி சுமத்தினார், அவருடன் மீண்டும் கூட்டு வைக்கவில்லையா?' என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்கள். வைகோவோ தொண்டர்கள் மனமறிந்து முடிவெடுப்பேன் என்று கூறி புதிருக்கு புதிரால் விடையளிக்கிறார். அவருக்கு என்ன பயம் என்றால் சட்டமன்ற கணக்குகளை மனதில் வைத்து தான் மத்திய அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்ற முடிவிற்கு வந்தார். இப்போது ஜாதி ரீதியாக மதிமுக வாக்குகளை விஜயகாந்த் பிரிக்க கூடும் என்ற கருத்து நிலவும் நேரத்தில் அதிகபட்சமான சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றுவதன் அவசியத்தை அவர் உணர்ந்துள்ளார். இன்றைக்கு கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் அதிகாரம் கைப்பற்றும் ஆசை கொள்ளும் போது அவருக்கு மட்டும் அது இருக்காதா என்ன?

விஜயகாந்த் தன்னுடைய வியூகத்தை வெகு தெளிவாக சொல்லி விட்டார். பொதுவாகவே அரசியல்வாதிகளுக்கு இருக்கும் எதிர்ப்பினை கொண்டு லஞ்சம் ஊழலற்ற அரசு என்ற கோஷத்தினை முன்வைத்து ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு நம்மால் சாதிக்க முடியும் என்று அவர் நம்பினார். ஆனால் இப்போது அரசு சலுகைகளுக்கு பின் மக்கள் மனோ நிலை மாறியுள்ளதை அவரால் உணர முடிகிறது. இதனிடையே மண்டபத்தை இடிக்கிறேன் என்று மத்திய அரசு கிளம்பியிருப்பதால் அவர் அதனை எதிர்க்க ஆளும் ஜெ கூட்டணியில் சேரலாம் என்று சிலர் கூறுகிறார்கள். திமுக கூட்டணியையும் கலைஞரையும் கடுமையாக விமர்சிக்கும் அவர் ஜெயலலிதா குறித்தோ ஆளும் அரசு குறித்தோ அதிகம் விமர்சிக்காமல் வாய்ப்புகளை திறந்து வைத்துள்ளார்.

இவர்கள் கணக்குகள் எல்லாம் இப்படி இருக்க பாமரர்களின் மனோ நிலையோ ஆளும் அரசின் பக்கம் லேசாக சாயும் நிலையில் இருக்கிறது. தன்னுடைய பணம் தான் தனக்கு கொடுக்கப்படுகிறது என்றாலும் கூட கொடுக்கப்ப்படும் 1000 அல்லது 2000 ரூபாய் அவர்களது மனோ நிலையில் உண்டாக்கும் மாற்றம் தமிழகத்தில் இலவசங்களின் மவுசினை குறைப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதை நமக்கு உணர்த்துகிறது. சுய உதவிக் குழுக்கள் கிராம பெண்களிடையே ஆளும் அதிமுக அரசுக்கு அதிக வரவேற்பினை பெற்று தந்துள்ளது என்பது உண்மை.

நாட்டு நலம் விரும்பிகள் நடு நிலையாளர்களை பொறுத்த வரை இந்த சூழ் நிலை பெரும் பணக்காரர் சாக கிடக்கும்போது இருக்கும் சூழல் தான் இது. உறவுக்காரர்கள் எல்லாம் வந்து அவரது அருமை பெருமைகளை பேசி நிற்பார்கள். மறு நாள் அவர் இறந்ததும் ஒப்பாரி வைத்து துயரக் கடலில் மூழ்கும் அவர்கள் ஒப்பாரி சத்தம் ஓயும் முன் அவரது சொத்துக்கு சண்டையிட்டு நிற்பார்கள். அவர்களது பாசமெல்லாம் பணத்திடமும் பதவியிடமும் தானே தவிர உண்மையல்ல என்பது ஊரறிந்த ரகசியம்.

சும்மாவே நாடகதாரிகள். இதில் ஜாக்பாட் பரிசு என்றால் கேட்கவா வேண்டும். மாற்றி மாற்றி அறுவை சிகிச்சை செய்து இவர்கள் முகமே கிழிந்து விட்ட போதும் முகமூடியை மாட்டி கொண்டு வந்து நாடகமாட மறவாத வெட்கம் கெட்டவர்கள். இதுவும் கடந்து போம் என்று ஒரு சொல் வழக்கு உண்டு. தேர்தல் விரைவில் வரட்டும், இவர்கள் நாடகம் விரைவில் ஓயட்டும், செயற்கை பீதிகளில் இருந்து விடுவித்து மக்களை தங்களது இயல்பு வாழ்க்கைக்கு இவர்கள் அனுமதிக்கட்டும். தேர்தலே போ, போ. கடந்து விரைவில் போ.

Friday, January 13, 2006

பொங்கல் வாழ்த்து

இந்த பொங்கலை இந்திய விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாட பல காரணங்கள் இருக்கிறது. மாறி வரும் இந்திய பொருளாதார சூழலுக்கேற்ப இந்திய கிராம சூழலும் மாறி வருகிறது. வரும் பட்ஜெட்டிலும் கிராமப்புற வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க இருப்பதாக நிதி அமைச்சர் சிதம்பரம் அறிவித்துள்ளார். நீர் உயர வரப்பு உயரும், வரப்பு உயர நெல் உயரும், நெல் உயர அரசன் உயர்வான் என்று ஒரு பழந்தமிழ் பாட்டு உண்டு. விவசாயி சிறப்பாக இருக்கும் நாடு சுபிட்சம் பெறும் என்பது இயல்பு. விரைவில் அந்த நிலையை இந்தியாஅடைய வேண்டும். எனது பொங்கல் வாழ்த்து கவிதையை இங்கே காணலாம்.

http://sangathamizh.blogspot.com/2006/01/blog-post.html

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.