Monday, May 07, 2007

தினகரன் சர்வே: யோக்கியன் வர்றான்

'ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுகவின் தலைமையை ஏற்பவர் யார்' என்ற தினகரன் சர்வேயைப் பற்றிக் குறிப்பிட்டு, ஏசி நீல்சன் நிறுவன புகழ் குறித்தும், 'சன் தொலைக்காட்சியின்' குதர்க்க குணம் குறித்தும் தங்கவேலு பதிவு இட்டிருந்தார்.

http://puliamaram.blogspot.com/2007/05/blog-post_04.html

அதற்குரிய பின்னூட்டத்திலும் இந்த கருத்துக்கணிப்புகள் குறித்தும் ஏசி நீல்சனின் புகழ் மற்றும் திறன் குறித்தும் விவாதங்கள் இடம் பெற்றிருந்தன. பின்னூட்டத்தில் இந்த விஷயத்தை இவ்வளவு சீரியஸாக விவாதித்து இருக்கும் அத்தனை பேரும் சர்வே வெளியாகி விட்ட நிலையில் அந்த சர்வேயில் கூறப்பட்டிருக்கும் தகவல் (நக்கல்) காமெடி பற்றிக் கூறவேயில்லையே.(அப்போது அடித்த இந்த பின்னூட்டம் நீளத்தால் தனி இடுகையாகி விட்டது.)

அதாவது ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுகவை தலைமை தாங்க மக்கள் தேர்ந்தெடுத்துள்ள வரிசையில் இரண்டாவது இடம் வைகோவுக்கு. அதாவது தனது கட்சிக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள சிரமப்பட்டுக் கொண்டிருக்கும், அதிமுகவைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிர்ப்பந்தத்தை ஜீரணிக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிற வைகோவுக்கு.




முதல் நபராக பன்னீர் செல்வத்தை இட்டிருப்பதற்கு காரணம், சட்டசபை துணைத் தலைவரான இவர் தான் அவைக்கு ரெகுலராக வருகிறார். அவரை அம்மாவிடம் போட்டுக் கொடுப்பதற்கு. இரண்டாவது இடமாக வைகோ, ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஜெயலலிதாவையும், அதிமுகவினரையும் எரிச்சலூட்டியது போல் ஆயிற்று. அத்துடன் வைகோவுக்கு எரிச்சலையும் மதிமுகவினருக்கு பீதியையும் கிளப்பியது போல் ஆயிற்று. செஞ்சி குழுவுக்கு சப்போர்ட்டாமாமாம். இராஜதந்திரமாமாம்.

இந்த பக்கத்து இலைக்கு பாயசம் எதுக்காக என்றால், சில நாட்களில் திமுகவுக்கு அடுத்த வாரிசு ஸ்டாலின் தான் என்று மக்கள் ஒருமனதாகக் கூறியுள்ளதாக கருத்துக் கூறுவதற்கு. அடப் போங்கப்பா, திமுகவோட உட்கட்சி ஜனநாயகத்தில் இது என்ன புதுசா.

ஆனால் ஒன்று ஜெயலலிதா சர்வேயினை முன்னேயே எடுத்து விட்டதன் காரணம், பேராசிரியர் அன்பழகனை கடந்த வாரத்தில் 'உதவிப் பேராசிரியர்' என்று அதிமுகவினர் நக்கல் பண்ணியது தான் என்று சிலர் சொல்கிறார்கள்.

கடந்த சில நாட்களில் வந்திருக்கும் பொதுமக்கள் கருத்தாக வந்திருக்கும் சர்வேக்களைப் பார்த்தால் இந்த சர்வேக்களின் தரம் தெரியும்.

1. ரஜினி அரசியலுக்கு வரத் தேவையில்லை என்று 40 சதவீதம் பேரும், வீண் வேலை என்று 14 சதவீதமும் சொல்லியிருக்கிறார்கள்.




ஏற்கனவே விஜயகாந்த் இவர்களுக்கு இம்சை கொடுத்துக் கொண்டிருக்கிறார். சரத்குமார் ரெடியாகி விட்டார். இதில் ரஜினிகாந்த் வேறா. ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன் மீண்டும் 'நான் அரசியலுக்கு வருவேனா என்று தெரியாது, அது ஆண்டவனின் கையில் இருக்கிறது' என்று தெரிவித்திருந்தார். (மறுபடியும் ஆரம்பத்திலிருந்தா !!!!). அந்த மாதிரி எண்ணத்திற்கு பொதுமக்கள் ஆதரவில்லை என்று காட்டுகிறார்களாம்.

2. ஜாதிக் கட்சிகள் அவசியமில்லை:
சரத்குமார் கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்தை வெளிப்படுத்திய பிறகு வந்தது.






3. தமிழக அளவில் 63 சதவீதம் பேர் தமிழகத்தில் தனிக்கட்சி ஆட்சியைத் தான் விரும்புகிறார்கள்.
இது காங்கிரஸ் கட்சியினருக்கு கோடி காட்டுவதற்கு




4. ஜெயலலிதாவிற்கு பிறகு பன்னீர் செல்வம் தான் கட்சிக்கு தலைமை தாங்க சரியான ஆள்.
பணிவுக்கு பேர் போன (?) இவரை அம்மாவிடம் மாட்டி விடுவதற்கு.


அதாவது இவர்கள் சொல்ல விரும்பிய கருத்துக்களை மக்கள் எண்ணமாகச் சொல்வதற்கு.

கலைஞர், ஜெயலலிதா அல்லாமல் வேறு யார் முதல்வராக இருக்க தகுதி இருக்கிறது?
துணைநகரம் திட்டம் கைவிடப்பட்டது சரியா?
ஆட்சிக்கு பிறகு திமுக செல்வாக்கு கூடியிருக்கிறதா?
படப் பெயரை தமிழில் வைக்கும் சினிமாக்களுக்கு வரிவிலக்கு சரியா?
சிறப்பு பொருளாதார மண்டல சலுகைகள் அவசிய்மா?


இது போன்ற 'பைசா' பெறாத கேள்விகளை கேட்பதால் யாருக்கு புண்ணியம் வரப் போகிறது என்பதால் ஒருவேளை இதுவரை இதுபோன்ற கேள்விகள் வரவில்லை என்று நினைக்கிறேன்.

மற்றபடி நடுநிலை நாளேடு என்று தினகரன், தினமலர், மக்கள் குரல் ஆகிய பத்திரிகைகள் எல்லாம் விளம்பரப்படுத்தும்போது, 'யோக்கியன் வர்றான், செம்பெடுத்து உள்ளே வை' என்கிற பழமொழி ஞாபகத்திற்கு வருவது ரொம்ப இயல்பான ஒன்று தான்.(அப்பாடா, தலைப்பை ஜஸ்டிஃபை பண்ணியாச்சு).