Saturday, April 18, 2009

சமரசம் உலாவும் இடமே...

நம் வாழ்வில் காணா சமரசம் உலவும் இடமே என்று சுடுகாட்டில் பாடும் பழைய புகழ்பெற்ற பாடல் ஒன்று உள்ளது.

ஆனால் வாக்குமேடைகளும் இந்த விஷயத்தில் சமரசத்திற்கு சளைத்தவையல்ல என்பதை நாடெங்கிலும் தேர்தல் பிரச்சாரம் நமக்குக் காட்டி வருகிறது.




இந்த மேடையின் இணைந்த கைகளுக்குப் பின்னால் இருக்கும் சமரசங்கள்:

1. கடைசி வரை முயற்சி செய்தும் காங்கிரஸை முழுவதுமாய் இழுக்க முடியாததால், வேறு வழியின்றி, தானும் பிரதமர் வேட்பாளர் தான் என்று கூறினால் தோழர்கள் கையைப் பிசைய வேண்டியது வரும் என்று புரிந்து, சரி இப்போதைக்கு தானே என்று ஜெ. செய்து கொண்டுள்ள சமரசம்.

2. காங்கிரஸை இழுத்து அது கூட கூட்டணி போட்டிருந்தா சகோதரி, கலைஞர் ரெண்டு பேருக்கும் ஒருசேர பாடம் கற்பிச்சுருக்கலாம், நடிகருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கலாம்னு பார்த்தா, இந்த காங்கிரஸ்காரங்க, சே, அதிலே ஒரு கோஷ்டி கூட, அதுக்கு ஒத்து வர மாட்டேங்குதே, நிருபருங்க, நடிகர் எல்லாம் நம்மளை கேவலமா பேசற மாதிரி ஆயிட்டுதே, சரி வேற வழியில்ல, ஈழத்தமிழருக்காக பாடுபடவும், சமச்சீர் கல்வி கொண்டு வரவும், தமிழ் வளர்ப்புக்கும் சகோதரியை நம்பலாம், குறைந்தபட்சம் நடக்கலேன்னா கூட பழி நம்ம மேல விழாது என்று மருத்துவர் அய்யா செய்து கொண்டுள்ள சமரசம்.

3. பொடா சட்டத்தில் உள்ளே போட்டது கூட பழைய கதை என்று விட்டு விடலாம். ஆனால் கூடவே இருந்த எனக்கு நாலு சீட் வாங்கறதுக்கு நாக்கு தள்ளிடுச்சே....இது தான் நல்லவர்க்கும், நாவன்மையாளர்க்கும் காட்டுகிற பிரதியுபகாரமா? என்று கொந்தளித்த மனதை கட்டுப்படுத்தி, 'கூட்டணியைப் பற்றியோ அரசியல் பற்றியோ பேசும் மனநிலையில் நான் இல்லை' என்ற விரக்தியில் இருந்து சற்று மீண்டு யதார்த்தத்துடன் வைகோ மேற்கொண்டுள்ள சமரசம்.

4. காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணியை அமைப்போம், என்றாலும் தேர்தலுக்கு பின் காங்கிரஸ்க்கு ஆதரவளிக்கும் வாய்ப்பை புறந்தள்ளி விடவில்லை, தவிர பதவி இல்லாமல் இருந்தது போதும், உருவாகவிருக்கும் அமைச்சரவையில் நாங்கள் பங்கேற்கலாம் என்றெல்லாம் கொள்கைப் பிடிப்பில் கோலோச்சிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டு தோழர்கள் பாட்டாளி வர்க்கத்தின் உண்மையான பிரதிநிதியான ஜெயலலிதாவுடன் செய்து கொண்டுள்ள சமரசம்.

இது வாக்குவங்கி சமரசம். இவற்றின் குறைந்தபட்ச ஆயுட்காலம் தேர்தல் தேதி வரை. அதற்குப் பின்.....? 

அது அவர்களின் ராஜதந்திரத்திற்கான காலம்......பயந்து விடாதீர்கள். மனதை தளர்வாய் வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் எது செய்தாலும் உங்கள் நன்மைக்காகத் தான் செய்கிறார்கள்.

Monday, April 06, 2009

72 இலட்சம் கோடியில் என்னென்ன செய்யலாம்?

இதுநாள் வரை இந்திய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வரி ஏய்ப்பு செய்து ஸ்விஸ் வங்கிகளில் சேமித்து வைத்திருக்கும் பதுக்கல் பணம் 72 இலட்சம் கோடியில் இருந்து 92 இலட்சம் கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பீடுகள் கூறுகின்றன. இந்த பணத்தை நாட்டிற்கு கொண்டு வர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் வாக்குறுதி அளித்திருக்கின்றன.

இந்த 72 இலட்சம் கோடியில் என்னென்ன செய்யலாம்?

மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் என அனைத்து வகைக் கல்லூரிக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வியை இலவசமாக்கலாம். (கல்விக்காக பொருட்களின் மீது விதிக்கப்படும் 2 சதவீத கூடுதல் வரியை நீக்கலாம்.)

நதிகள் இணைப்புத் திட்டத்தை நிதிப் பிரச்சினை இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாய் செயல்படுத்தத் துவங்கலாம்.

சமூக பாதுகாப்பு, அடிப்படை சுகாதார வசதிகள் என்பவை எல்லாம் முன்னேறிய ஏகாதிபத்திய நாடுகளின் மக்களுக்குத் தான் என்றில்லாமல் இங்கும் சீரிய முறையில் அமல்படுத்தலாம்.

இப்படி எந்த திட்டம் என்றாலும் அது முழுமையாக 110 கோடி மக்களையும் திருப்திப்படுத்தாமல் கூட போய் விடலாம். அதனால் திருமங்கலம் தொகுதியில் அரசியல்வாதிகள் செய்தது போல் ரொக்கப் பணமாக இந்திய மக்கள்தொகை முழுமைக்கும் தலைக்கு இவ்வளவு எனப் பிரித்துக் கொடுத்து விடலாம். வாக்குரிமை கொண்டவர்களுக்கு மட்டும் என்று பிரித்தாலே, தலைக்கு ஒரு லட்சம் வரை கிடைக்கும். குறைந்த பட்சம் பணப்புழக்கம் அதிகரித்து, பணவீக்கம் அதிகரிக்கும். (இது தானே இப்போது ரிசர்வ் வங்கியின் தலைவலி). திருமங்கலம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

பாவம் பதுக்கல்வாதிகள். உலகத்தில் பணத்தை எங்கே பதுக்கி வைத்தால் பாதுகாப்பு என்று பார்த்து பார்த்து கோடிகளைக் கொண்டு போய் அயல்நாட்டு வங்கிகளில் குவித்தார்கள். இப்போது ஒபாமா புண்ணியத்தில் அத்தனைக்கும் ஆப்பு.

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரி கட்டிய கதையாக, இத்தனை நாளாக இதனைப் பற்றி மூச்சு விடாத இந்திய அரசியல்வாதிகள், அமெரிக்காவின் கறுப்பு பணத்தை வரி வலைக்குள் கொண்டு வர வரி ஏய்ப்பை தடுக்க ஒபாமா ஸ்விஸ் வங்கிகளுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க, தூக்கத்தில் இருந்து விழித்ததைப் போல இப்போது நமது அரசியல்வாதிகளும் குரல் கொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள்.

இந்த பணத்தை தேசத்திற்கு கொண்டு வருவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. தேசியவாதி அத்வானியும் அந்த பணத்தை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக மேடை தோறும் முழங்கி காங்கிரசுக்கு தேர்தல் சமயத்தில் நெருக்குதல் அளித்து வருகிறார். ஜமீன்தாரர்கள் கட்சியான காங்கிரசுக்கு தான் நெருக்கடி. பாவம் எத்தனை பெரிய தலைகளுக்கு பக் பக் என்கிறதோ. ஆனாலும் வாக்குவங்கியை விடமுடியுமா. தாங்கள் இந்த கணக்கு விவரங்கள் கோரி சுவிஸ் வங்கிகளிடம் விண்ணப்பம் செய்திருப்பதாகவும், தாங்கள் எதனையும் மறைக்கவில்லை என்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியிருக்கிறார்.

இலங்கை பிரச்சினை போலவே இந்த பிரச்சினையும் தேர்தலுக்கு பின் பல கட்சிகளால் புறந்தள்ளப்படும் சூழ்ச்சி நேரலாம். 

கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்து பிரதிநிதிகளும் இந்த பிரச்சினையில் கவனம் சிதறாமல் வலியுறுத்தினால் மட்டுமே ஊழல் பெருச்சாளிகள் கொண்டு சென்ற பணமூட்டைகளை பத்திரமாய் வீடு கொண்டு வந்து சேர்க்க முடியும். பல்வேறு அரசியல் கட்சிகளுக்குள்ளும் தொழிற்சங்கங்களுக்குள்ளும் சிக்கியிருக்கும் இந்த பிரதிநிதிகள் தங்கள் வர்க்கத்தின் நலன் காக்க ஒன்றுபட்டு போராடினால் தான் உண்மைகள் மட்டுமல்ல உரிமைகளும் மீட்கப்படும். செய்வார்களா?