ராமாயணத்தில் ஒரு காட்சி. குளிக்க ஆற்றுக்கு செல்லும் ராமன் வில் அம்பை எடுத்து கீழே வைக்க விழைகிறான். அம்பை படுக்கை வசமாக வைக்க கூடாது. நிறுத்தி தான் வைக்க வேண்டும். அதனால் அம்பை அவன் நேர்குத்தாக மண்ணில் செருக ஆ என்று வலியுடன் கூடிய அழுகை சத்தம் ஒன்று கேட்கிறது. திடுக்கிட்ட ராமன் அம்பை பார்க்க அதன் கீழே ஒரு தேரை உயிருக்கு போராடி கொண்டிருந்தது. ராமனுக்கு கண்ணில் நீர் அரும்பி விட்டது. அவன் அந்த தேரையை பார்த்து சொல்கிறான், "தேரையே என்னை மன்னித்து விடு. நான் உன்னை கவனிக்காமல் இத்தவறினை செய்து விட்டேன். நான் அம்பை ஓங்கும்போது நீயாவது ராமா என்று ஒரு சிறு குரல் கொடுத்திருக்கலாமே. என்னை இப்பிழையிலிருந்து காப்பாற்றி இருக்கலாமே" என்று கேட்டான். இப்போது தேரை மரண வலியிலும் மகிழ்ச்சியுடன் பேசியது. "ராமா, யார் எனக்கு தீங்கு செய்ய விழைந்தாலும் நான் ராமா என்று உன்னை அழைப்பது வழக்கம். இன்றும் அம்பு என்னை நோக்கி வருவதை கண்டு அப்படித்தான் நான் வாயெடுத்தேன். ஆனால் அம்பை செலுத்துவதே நீ தான் என்று கண்டதும் செய்வதறியாது நான் வாயடைத்து நின்று விட்டேன்" என்று கூறியது. ராமன் கண்ணீர் பெருக்குடன் 'என்னை மன்னித்து விடு' என்று கூற 'அறியாமல் செய்யும் தவறுகள் அப்போதே மன்னிக்கப்படுகின்றன என்று சொன்னவனே நீ தானே' என்று தேரை கூறி உயிரை விடுவதாக கதை முடிகிறது.
சென்ற வருடம் இதே நாளில் கடலும் தன் சக்தியை இவ்வாறு தான் காட்டியது. கடலை தன் தாயாக நினைத்த மீனவர்கள், நண்பனாக பாவித்த குழந்தைகள், வாக்கிங் சென்று கொண்டிருந்தவர்கள் அனைவரையும் எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் தன்னுள் சுருட்டிக் கொண்டது. (அளவு கடந்த பாசத்தால் தான் தன் அமானுஷ்ய அமைதியில் அவர்களையும் இழுத்து கொண்டதுவோ ).
( சுனாமி சமயத்தில் எனக்கு தோன்றிய கவிதை(?) இங்கே
http://sangathamizh.blogspot.com/2005/06/blog-post.html )
இதில் ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மத ரீதியில் இதற்கு ஒரு விளக்கம் கொடுக்க முற்பட்டது பரிதாபம் என்றால் சாதி மத இன தேச வரம்புகள் தாண்டி உதவிக் கரம் நீண்டது மனித மகத்துவம். விவேக் ஓபராய் நாகப்பட்டினம் வந்து தானே முன்னின்று நிவாரணப் பணிகளுக்கு உதவியது கலாச்சார மனிதாபிமானத்திற்கு உதாரணம் என்றால் ஏராளமாகக் குவிந்த நிதியினை விநியோகம் செய்கிறேன் என்ற பெயரில் எவ்வளவு பணம் ஊழல் செய்யலாம் என்று எண்ணிய மனித குணம் விலங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பதை நிரூபணம் செய்யும் மிருகத்தனம்.
சுனாமி, பூகம்பம், மழை என கடந்த 400 நாட்களில் இயற்கை நமக்கு கற்றுக் கொடுத்திருக்கும் பாடம் அதன் வலிமை மற்றும் பேரழிவு மேலாண்மையில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன என்பது.
இலங்கையிலே சுனாமிக்கு தன் முழு குடும்பத்தையும் இழந்து கதறி அழுத ஒருவர் சொன்னார், என்னை விட்டு எல்லோரும் சென்றது ஏன் ? என்னை விட்டு விட்டது ஏன்?
"Why all have left ? Why I have been left ? "
அவருக்கு எந்த சக மனிதனும் என்ன ஆறுதல் கூறி விட முடியும் ? விசித்திரமான இந்த உலக வாழ்க்கை தினந்தோறும் முடிச்சுகளை போடுவதும் அவிழ்ப்பதுமாக தனது அதீத விளையாட்டை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. அதன் அசைவுகளை புரிந்து கொள்ள நாம் பல யுகங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது.
சுனாமி பாதிக்கப்பட்டுள்ள பல பகுதிகளில் மக்கள் தம் கண்ணீரைத் துடைத்து விட்டு மீண்டும் தனது இயல்பு வாழ்க்கையை தொடர்வதை பார்க்கும்போது மனிதத்தின் சக்தியும் இயலாமையும் ஒருங்கே வெளிப்படுகிறது. மீண்டவர் தம் நல்வாழ்வில் மாண்டவர் ஆத்மா சாந்தி பெறட்டும். பழியினை படைத்தவன் ஏற்கட்டும், காயம்தனை காலம் ஆற்றட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment