Saturday, December 17, 2005

சேப்பலின் பிடியில் இந்திய கிரிக்கெட் ?

இந்தியா மளமளவென்று வெற்றிகளைக் குவித்து வருகிறது. டிராவிட்டின் தலைமைக்கு புகழ் மலை குவிகிறது. சேப்பல் விஷயத்தில் எல்லோரும் எச்சரிக்கை உணர்வில் மவுனத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். இளம் வீரர்கள் கொடுத்த வாய்ப்புகளில் சிறப்பாகப் பிரகாசிக்கிறார்கள். ஐசிசி தரப் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் போல் தெரிகிறது.

எல்லாமே திடீரென்று வெளிச்சமாகி விட்டது போல் தெரிகிறது. ஆனால் இந்த தோற்றம் உண்மைதானா அல்லது மாயையா என்று உள்ளே ஒரு கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஏனென்றால் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தாலும் கூட டிராவிட் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடுவதாகத் தெரியவில்லை. ஏன் ?

எப்போதுமே வெற்றி பெறுவோர் செய்த தவறுகள் கண்டு கொள்ளப்படுவதில்லை. நமது அணியின் உண்மையான மதிப்பீட்டை இலங்கை ஒரு அணியுடனான ஆட்டத்தின் மூலம் நிர்ணயிப்படுத்திக் கொண்டு அதனடிப்படையில் தடாலடி முடிவுகள் எடுப்பது அறிவார்ந்த செயல் தானா என்பதில் நமக்கு சந்தேகம் இருக்கிறது.

கிரிக்கெட்டின் இடையே டிடியில் ஒருவர் ஸ்ரீகாந்த்திடம் கேள்வி ஒன்று கேட்டார். அதாவது சீனியர் பிளேயர்கள் பந்துவீச்சாளர்களை ஆதிக்கம் செய்வதை விட புதிய வீரர்கள் நன்றாக ஆதிக்கம் செலுத்தி விளையாடுகிறார்களே அது எப்படியென்று. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீரர் நன்றாக விளையாடுவார், அதனை வைத்து நிரந்தர முடிவுக்கு நீங்கள் வந்து விடக் கூடாது, ரன் குவிப்பு மட்டுமல்ல விளையாட்டு திறன் மற்றும் பல வகைமுறைகளை வைத்துத் தான் வீரர்களை மதிப்பிட வேண்டும், அணி வெற்றியே முக்கியம், இதில் சீனியர் ஜூனியர் என்று அனாவசியமான குழுபிரித்தல் இருக்கக்கூடாது என்று அவருக்கு விளக்குவதற்குள் ஸ்ரீகாந்திற்கு போதும் போதும் என்றாகி விட்டது.

சரி விஷயத்திற்கு வருவோம். அதற்குள் அவசரப்பட்டு பலர் கோபம் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

1. முதலில் கங்குலி செய்த அதே தவறைத் தான் இப்போது சேப்பலும் கிரிக்கெட் தேர்வுக்குழுவும் (வாரியமும் கூட ) செய்கிறது. எப்படி அவர் ஜிம்பாப்வேயுடன் அடித்த சதத்தை பெரிய சாதனையாக எண்ணிக் கொண்டு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து மாட்டிக் கொண்டாரோ அதேபோல இப்போது இந்திய அணியின் சிந்தனை மூலங்களும் இலங்கை அணியுடனான ஒரே தொடரை மனதில் வைத்துக் கொண்டு பல முடிவுகள் எடுப்பது நிச்சயம் அசட்டுத்தனம். கங்குலி செய்த தவறு தனி மனிதன் செய்யும் தவறு, அது இயல்பு என்று விட்டு விடலாம். ஆனால் இப்படி ஒரு கும்பலே சேர்ந்து செய்யும் தவறுக்கு யார் பொறுப்பேற்பது?
2. கங்குலியை மூன்றாவது ஆட்டத்திற்கு எடுக்காததிற்கு மோரே சொல்லியிருக்கும் பதில் : "கங்குலியை ஆறாவது இடத்தில் இறக்க அணிக்கு விருப்பமில்லை, அது யுவராஜ் சிங்கிற்கு செய்யும் அநீதி, இதன் மூலம் கங்குலிக்கு கதவு மூடப்பட்டதாக அர்த்தமில்லை". அவர் சொல்வது அவருக்காவது புரிகிறதா என்று தெரியவில்லை, கங்குலியை இரண்டாவது ஆட்டத்திற்கு எடுக்கும்போது என்ன நினைத்து எடுத்தார், அதற்கு என்ன பங்கம் வந்து விட்டது. கங்குலி சீனியர் பிளேயர் என்று ஒத்துக் கொள்ளும் இவர்கள் இனி இவர் எப்போது அணிக்கு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உண்மையில் நீங்கள் இளம் வீரர்களை ஊக்குவிப்பதற்காக கங்குலியை எடுக்க விரும்பவில்லை என்றால் இரண்டாவது ஆட்டத்திற்கு எதற்காக எடுத்தீர்கள், அப்படியே இருந்தாலும் பலமுறை தேர்வு பெற்று நீக்கப்படும் அகர்கர் என்ன 16 வயது வீரரா ? அவ்வளவு ஏன், இப்போது கங்குலிக்கு எதிராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் வாசிம் ஜாபர் 2000லியே அறிமுகப்படுத்தப்பட்டவர் தானே, 2002ல் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டவர் தானே, அவசரம் அவசரமாக கங்குலியை நீக்கி விட்டு அவரைக் கொண்டு வர வேண்டிய திடீர் அவசியம் என்ன வந்தது.

கங்குலி நீக்கப்பட்டிருப்பதில் பலருக்கு அதிக வருத்தம் இல்லை, ஆனால் அவர் கையாளப்பட்டிருக்கும் விதம் எந்த ஒரு தன்மானமுள்ள இந்தியனையும் காயப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. வீரர்கள் தேர்வு என்பது பல்வேறு வீரர்களின் நிறை குறைகளை ஆராய்ந்து அணிக்குப் பலம் தரும் வகையில் சரியான விகிதத்தில் வீரர்களைத் தேர்வு செய்வது. அதை விட்டு விட்டு யாரோ ஒரு நபர் இவர் வேண்டும் அவர் வேண்டும் என்று கூறுவதற்கு தங்களுடைய கணிப்புத் திறனை அடகு வைத்து விட்டு ஒரு குழு தேர்வு செய்தால் ஐயோ பாவம் அதன் பலன் வெகு விரைவில் காலம் காண்பித்து வைக்கும் . பலருக்கு 2007 உலகக் கோப்பை தான் இலக்கு என்று கூறுவது பேஷனாகி விட்டது. தவறில்லை. ஆனால் திடீர் மாற்றங்கள் பலனளிக்காமல் போனால் சீனியர்களையும் கூப்பிட இயலாமல் புதிய வீரர்களையும் கோபிக்க இயலாமல் திரிசங்கு சொர்க்கமாகி விடுமே? அதற்கு இவர்களிடம் பதில் இருக்கிறதா?

இப்போது கங்குலியை தூக்கி விட்டார்கள். நமது அடுத்த பயணம் பாகிஸ்தானுக்கு. அங்கே ஷோகிப் அக்தரை அவரது ஊரிலேயே சந்திக்க வேண்டும், அது மட்டுமல்ல அவர்களது பேட்ஸ்மேன்கள் சிறந்த பார்மில் உள்ளனர், ஆசஸில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்த இங்கிலாந்து அணியே ஸோகிப் அக்தரின் பந்துவீச்சிலும், முகமது யூசிப்பின் ( அதாங்க நம்ம யூசுப் யுகானா ) பேட்டிங்கிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது. அப்படியிருக்கிற பட்சத்தில் அந்த அணியுடனான ஆட்டங்கள் மிகுந்த சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. சென்ற முறை கங்குலி தலைமையில் சென்ற அணி பாகிஸ்தானிலிருந்து தொடரை வெற்றி கொண்டு திரும்பியது என்பது தெரிந்திருக்கும். அப்படியிருக்க இந்த முறை பாகிஸ்தானில் ஜெயிக்க முடியாவிட்டாலும் படு தோல்வியைச் சந்தித்தால் அப்போது கிரன் மோரே என்ன செய்வார்? தொடர்ந்து இளம் வீரர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்ற உறுதியை அவரால் தர முடியுமா ? ஒரு தொடர் படுதோல்வி அடைந்து விட்டால் பிறகு எல்லாமே ஆரம்ப கட்டத்திற்கு வந்து விடும். அப்புறம் கூடி அமர்ந்து புலம்புவதைத் தவிர யாராலும் என்ன செய்ய முடியும்.

இவர்கள் இந்திய கிரிக்கெட் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளவர்களாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும். கங்குலியை அணியில் எடுப்பது அணியில் ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிக்கும் என்று கருதினால் கங்குலியை இரண்டாவது ஆட்டத்திற்கு தேர்வு செய்திருக்கவே வேண்டாம், அப்போது கூட இவ்வளவு சர்ச்சைகள் இருந்திருக்காது. கங்குலிக்கும் வாய்ப்புக் கொடுத்து அவரும் தன்னை நிரூபிக்க வேண்டிய பதைப்பில் நிதானமாகவே (வழக்கத்தை விடக் கவனமாகவே ) ஆடி சிறப்பாகவே ரன் எடுத்திருக்கிறார். அச்சூழ்நிலையில் அவருக்கு மேலும் சில வாய்ப்புகள் கொடுத்து ஊக்கப்படுத்தியிருக்க வேண்டும். குறைந்த பட்சம் இவர்கள் ஏற்கனவே தீர்மானம் செய்திருந்த கங்குலியை நீக்கும் முடிவையாவது சில ஆட்டங்களுக்குத் தள்ளிப் போட்டிருக்க வேண்டும்.

குதிரை கீழேயும் தள்ளி குழியும் பறித்தது போல் கங்குலியை நீக்கியதை விட ஆத்திரப்பட வைத்திருப்பது வாசிம் ஜாபரின் தேர்வு. ஏனென்றால் கங்குலிக்கு பதிலாக அடுத்த ஆட்டத்தில் முகமது கைப் இடம் பெற்றிருந்தாலோ அல்லது வேறு தவிர்க்க முடியாத வீரர்கள் இடம் பெற்றிருந்தாலோ யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. ஆனால் ஏற்கனவே இரண்டு முறை பரிசோதிக்கப்பட்ட மும்பையின் வாசிம் ஜாபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கி இருக்கிறது. இதனால் தான் தேர்வுக் குழுவின் முடிவில் வாரியத்திற்கு தொடரிபில்லை என்கிற சரத்பவாரின் கூற்றை ஏற்றுக் கொள்ள நம் மனம் மறுக்கிறது. வாசிம் ஜாபர் திறமையான வீரர் என்பதிலோ உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து ரன் குவித்துக் கொண்டிருக்கிறார் என்பதோ மறுக்க முடியாது தான். ஆனால் இவையெல்லாம் திடீரென்று நடந்த விஷயமா என்ன? இரண்டு டெஸ்டுகளுக்கு எடுக்காத ஒருவரை திடீரென்று மூன்றாவது டெஸ்டில் கங்குலியை நீக்கி விட்டு எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்பது தான் கேள்வி.

இப்போது அரசியல் வேறு புகுந்து விட்டது. கம்யூனிஸ்டுகளும் ஜார்கன்ட் சட்டசபையும் ஜனாதிபதியின் தலையீட்டை கோரியிருக்கின்றன ( சிபிஐ விசாரணை சீசன் போய் இப்போது ஜனாதிபதி தலையீடு சீசன் போலும்). எனவே சம்பவங்கள் தங்களது பாதையில் தானாகவே பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் சம்பந்தப்பட்ட சிலர் தங்கள் காதில் போட்டுக் கொள்ள சில வார்த்தைகளைக் கூறி வைப்போம் .

சேப்பலுக்கு சில வார்த்தைகள்
உங்கள் ஆர்வம் தவறானதல்ல. உங்களது பாதையை அறிந்தவர்களுக்கு அது புதிதும் அல்ல. ஆனால் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. உலகத்தில் உள்ள எந்த கிரிக்கெட் வீரருமே இந்தியாவில் கிரிக்கெட் ஆடுவதை ஒரு லட்சியமாக கருதுவார்கள், உலக முதன்மை அணியாகக் கருதப்படும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் உட்பட, ஏன் என்று தெரியுமா உங்களுக்கு? இந்தியாவின் கிரிக்கெட் உணர்வினை அவர்கள் தங்களது நாட்டில் கூடக் காண்பதில்லை என்பது தான். அந்த அளவுக்கு ஆணி வேர் முதல் நுனிக்கிளை வரை இந்தியர்களின் உணர்வில் கிரிக்கெட் உணர்வு ஊறிப் போயுள்ளது. அதனால் தான் எத்தனையோ சர்ச்சைகளைத் தாண்டியும் அது சிறிதும் சேதாரமில்லாமல் வெற்றி நடை போடுகிறது. வீரர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் இந்த உணர்வு மங்குவதில்லை. அதனால் தான் ஒவ்வொருவரும் தங்களால் அணிக்கு என்ன செய்ய முடியும் என்று சிந்தித்து அதன் வரலாற்று ஏடுகளில் தங்கள் பெயரை அழுத்தமாக எழுத முனைகிறார்கள். எப்படி ஒரு வீரர் வெற்றி பெறும்போது அவரை ஊரே கொண்டாடுகிறதோ அதேபோல் அவர் தடுமாறும்போது அவரை ஊரே திரண்டு வந்து ஏசும். புகழ் மாலை சூட்டுவதிலும் அல்லது வசைமாலை தொடுப்பதிலும் மனிதர்களின் சிந்திக்கும் திறன் தாண்டி ஆதிக்கம் செலுத்தத்தக்கக் கூடியது இந்த உணர்வு.

அதனால் தான் அந்த நாட்டில் வந்து தங்கள் பெயர் பொறித்துச் செல்ல உலக வீரர்கள் ஆசைப்படுகிறார்கள். ஏன் ஸ்டீவ் வாக் சொல்லவில்லை, இந்தியாவில் வெற்றி பெறும் என்னுடைய கனவு நிறைவேறாமலேயே போய் விட்டது என்று. நீங்கள் இந்தியாவில் ஒரு ஆட்டம் கூட ஆடியதில்லை. அதனால் ஒருவேளை உங்களுக்குப் புரிந்து கொள்ள கடினமானதாக இருக்கலாம். இப்படிச் சொல்வது உங்களை பயமுறுத்துவதற்காக அல்ல, உங்களை விழிப்பூட்டுவதற்காக. அதே போல் நீங்கள் செய்வது எல்லாம் தவறென்றும் கூறவில்லை, நீங்கள் உண்மையாகவே இந்திய கிரிக்கெட்டின் நலன் கருதிச் செயல்படும் பட்சத்தில் உங்களது சிந்தனைகளை செயல்படுத்திப் பார்க்க உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் அதே சமயத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள் என்று தான் கூற விழைகிறோம். ஏனென்றால் எல்லோருக்கும் மோசமான நாட்கள் வரும், இப்போது சொர்க்கமாகத் தோன்றும் பதவி திடீரென்று முள் படுக்கையாகி விடும், இப்போது கைதட்டி ஆரவாரிப்பவர்கள் எல்லாம் அப்போது கைகொட்டிச் சிரிப்பார்கள். அதை எதிர்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்கும் பட்சத்தில் உங்களது போக்கில் தவறில்லை. அப்படியல்லாமல் சீர்திருத்தம் என்கிற பெயரில் கண்மண் தெரியாத மாற்றங்களில் ஈடுபட்டால் பின்னால் அவசரத்தில் காரியம் செய்து சாகவாசமாக சங்கடப்பட்ட கதையாகி விடும். அதனால் நினைத்ததையெல்லாம் செயல்படுத்த எண்ணும் பேரவா கொண்ட இளைஞனைப் போல் அல்லாமல் உங்கள் பதவி மற்றும் கவுரவத்திற்குரிய முதிர்ச்சியுடன் செயல்படுங்கள். ஏனென்றால் கங்குலி விவகாரம் அவருக்கு எதிராகப் போனதற்கு காரணம் அவரது அவசரம் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்களே அறியாமல் நீங்களும் அதேபடகில் பயணம் செய்யும் நிலையை உருவாக்கி காலம் விளையாடுவதை கணக்கில் கொள்ளுங்கள். இது உங்கள் நலன் கருதி மட்டுமல்ல, உங்களின் கையில் இருக்கும் இந்திய கிரிக்கெட் என்கிற விலை உயர்ந்த வைரத்தின் நலன் கருதியும் கூட. நீங்கள் தடுமாறி அதை தவற விட்டால் பாதிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நாம் முன்பு சொன்ன அவர்களின் கிரிக்கெட் உணர்வுக்கும் தான்.

டிராவிட்டுக்கு சில வார்த்தைகள்

கேப்டனாக தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்களின் அர்ப்பணிப்பு உணர்வு கற்பனைக்கும் அப்பாற்பட்டது. எத்தனையோ ஆட்டங்கள் உயிரைக் கொடுத்து ஆடிய ஆட்டங்கள் ஒன்று அணி தோல்வியுற்றதாலோ அல்லது இன்னொரு வீரர் அதிரடியாக ரன் குவித்ததாலோ இருட்டடிக்கப்பட்டு விட்ட்தைக் கண்டு எப்போதும் மனம் தளராமல் யார் கேப்டனாக இருந்தாலும் தன்னுடைய பணியை மிகச் சிறப்பாக ஆற்றிய ஒரு முன்னுதாரண வீரராகத் திகழ்வதில் சந்தேகமில்லை. ஆனால் இப்போதெல்லாம் பதான், தோனி சிறப்பாக விளையாடினால் உடனே சேப்பல் முன்னிறுத்தப்படுகிறார், அணித் தேர்வு விவகாரம் என்றால் சேப்பல் முன்னிறுத்தப்படுகிறார், ஊடகங்களும் கேப்டனை விட பயிற்சியாளருக்கே முக்கியத்துவம் கொடுப்பது நிச்சயம் தற்செயலான சம்பவங்களாகத் தெரியவில்லை. மாறாக அதிகார மையம் கேப்டனிடமிருந்து பயிற்சியாளர் கைக்குச் சென்று விட்டதோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. இதன் ஆபத்து நான் முன்னே குறிப்பிட்டதைப் போல் தொடர்ந்து சவாலான தொடர்களைச் சந்திக்கும்போதுதான் தெரியும்.

நீங்கள் பட்டும் படாமல் பதிலளித்தால் ஏற்கனவே பாதுகாப்பின்மை உணர்வால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் வீரர்கள் எப்படி உங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள். அது மட்டுமல்ல உலகம் முழுக்க எந்த அணியை எடுத்துக் கொண்டாலும் தலைமைப் பண்பின் முதல் தேவையே ஆதிக்க ஆளுமை உணர்வு தான். அந்த பதவிக்குரிய சுயமரியாதைக்கும் கவுரவத்திற்கும் தீங்கு நேராமல் பாதுகாப்பது கள ஆட்டத்தினைப் போன்றே நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாகும். ஏனென்றால் பணிவினை பலவீனமாகப் புரிந்து கொள்ளும் ஆபத்து உலகெங்கும் இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சில விஷயங்கள்

1. ஒரு தொடரை வைத்து முடிவெடுக்க அவசரப்படாதீர்கள். பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துடனான ஆட்டங்களுக்குப் பிறகு தான் நம் அணியின் உண்மையான பலம் தெரியவரும். அதனால் ஊடகங்களின் வர்த்தக மிகைப்படுத்தலுக்குப் பலியாகி மாயையில் மூழ்கி விட்டு பிறகு பெரிய அணி ஒன்றுடன் படுதோல்வியைச் சந்தித்தால் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் போல் உண்மை நம்மை முகத்தில் அறையும் நிலை ஏற்படும்.

2. மாநில எல்லைகளை கிரிக்கெட் கடந்து பல ஆண்டுகளாகி விட்டன, இன்னமும் கல்கத்தா, மும்பை என்று இருப்பிட ரீதியாக கிரிக்கெட் உணர்வுகளை வளர்க்காதீர்கள். இப்படி ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்தவரும் தங்கள் மாநில வீரர் விளையாட போராட்டத்தில் இறங்கினால் 28 மாநிலங்கள் இருக்கிறது நம் நாட்டில், ஆனால் கிரிக்கெட்டில் 11 பேர் தான் விளையாட முடியும்.

3. ஊடகங்களின் கருத்துத் திணிப்பில் கவனமாக இருங்கள். ஏனென்றால் ஊடகத்தில் இருக்கும் சில தனி நபர்களின் விருப்பு வெறுப்பு கருத்துகளின் உண்மையை கபளீகரம் செய்யும் ஆபத்தை சமீபத்தில் பல ஊடகங்களில் காண முடிகிறது. எனவே கருத்துக்களில் உண்மையைக் கண்டுகொள்ளக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் போலிகளிடம் ஏமாந்து நீங்கள் தவறான கருத்துகளை கிரகித்துக் கொண்டிருக்க நேரும். ( இந்த உண்மை கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, சமூகம், இலக்கியம் , அரசியல் என்ற எல்லாவற்றிற்கும் பொருந்தும்).

தேர்வுக் குழுவினருக்கு சில விஷயங்கள்

அய்யா புண்ணியவான்களே, கிரிக்கெட் தேர்வில் சர்ச்சை என்பது புதிதல்ல, எத்தனையோ பிரமாதமான ஆட்டக்காரர்களின் சேவையையே தேர்வுக் குழுவினரின் அசட்டைத் தேர்வினால் இந்தியா இழந்துள்ளது. ஆனால் முன்பு அவர்கள் தவறு செய்தபோது தொழில்நுட்பம் இவ்வளவு வளரவில்லை, கிரிக்கெட் இவ்வளவு பணம் குவிக்கவில்லை, இவ்வளவு அரசியல் தலையீடுகளும் இல்லை, ஊடகங்களின் கழுகுப் பார்வையும் இல்லை. நீங்கள் செய்யும் தவறுகள் சில வீரர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, அணியின் தேசத்தின் கவுரவம் சம்பந்தப்பட்டது. அதனால் முடிவுகள் எடுக்கும்போது தீர சிந்தித்து சிறந்த முடிவினை எடுங்கள். அப்போது தான் அந்த முடிவுகளை யாரிடமும் நியாயப்படுத்தும் தைரியம் உங்களுக்கு கிடைக்கும். அப்படியல்லாமல் உங்களின் சுய விருப்பு வெறுப்புகளை தேர்வில் திணித்து விட்டு, பிறகு கேள்வி எழும்போது நானில்லை நானில்லை என்று யார் பின்னாலோ ஓடி ஒளிய முயற்சிக்காதீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சில விஷயங்கள்

ஐயா அரசியல்வாதிகளே, நீங்கள் அரசியலில் செயல்படும் லட்சணத்தை நாடே தொலைக்காட்சிகளில் கண்டு சிரிக்கிறது, நீங்கள் இந்தியர்களின் உணர்வோடு கலந்து விட்ட விளையாட்டான கிரிக்கெட்டையாவது விட்டு வைக்கக் கூடாதா. கிரிக்கெட்டில் மிகுந்த பணம் புழங்குவது என்பது உண்மை தான், அதனால் நீங்கள் அதில் கவனம் கொள்ளாமல் இருக்க முடியாது என்பதும் உண்மை தான். ஆனால் கிரிக்கெட்டில் மட்டுமா பணம் புழங்குகிறது, இப்போதெல்லாம் கேள்வி கேட்கக் கூட உங்களுக்கு பணம் கிடைக்கிறதே, பிறகென்ன. ம். போகிற போக்கில் கங்குலி ரன் அடிக்கக் கோரி மறியல், அகர்கர் விக்கெட் எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம், பார்தீவ் படேல் கேட்ச் பிடிக்கக் கோரி உண்ணாவிரதம் என்று நீங்கள் கிளம்பாமல் சரி.

கங்குலிக்கு நாம் இப்போது சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் இப்போது கிளம்பியிருக்கும் சர்ச்சையால் அடுத்து வரும் பாகிஸ்தான் பயணத்தில் அவரின் தேர்வு உறுதியாக்கப்பட்டு விட்டது. ஆனால் எப்போதும் கழுத்துக்குக் மேலே தொங்கும் கத்தி ஒருபக்கம் விளையாடி ரன் குவித்து அதன்மூலம் அவருக்காக வாதாடியவர்களின் தரப்பை நியாயப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபக்கம் என 'நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு' என்று கண்ணதாசன் பாடியது போல் ஆகிவிட்டது அவர் நிலை. அவரது விதி இப்போது காலத்தின் கையில். (இந்த நிலையை தனக்கே இழுத்து விட்டுக் கொண்டது அவர் தான் என்பது வேறு விஷயம்.)

4 comments:

enRenRum-anbudan.BALA said...

Good Analysis. Keep it up !

மணியன் said...

மிகச் சிறப்பான நடுநிலையான ஆய்வு. நான் முற்றிலும் உடன்படுகிறேன்.

enRenRum-anbudan.BALA said...

Pl. see http://balaji_ammu.blogspot.com/2005/12/ganguly.html

Badri said...

"சென்ற முறை கங்குலி தலைமையில் சென்ற அணி பாகிஸ்தானிலிருந்து தொடரை வெற்றி கொண்டு திரும்பியது என்பது தெரிந்திருக்கும்."

சென்ற முறை பாகிஸ்தானில் முதல் இரண்டு டெஸ்ட்களில் கங்குலி விளையாடவில்லை - திராவிட்தான் கேப்டன். முதலிரண்டு டெஸ்ட்களில் ஆளுக்கு தலா ஒரு வெற்றி. மூன்றாவது டெஸ்டில் இந்தியா வெற்றிபெற முக்கியமான காரணம் திராவிடின் இரட்டை சதம் - 270 (லக்ஷ்மண் 71, கங்குலி 77).

அதனால் பாகிஸ்தானில் ஜெயிக்க கங்குலி தேவை, அவசியம் என்றெல்லாம் இல்லை.

மற்றபடி, கங்குலியை நீக்கவேண்டும் என்று சிலர் முடிவெடுத்துவிட்டால் அதனை gracefullஆகச் செய்திருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.