Tuesday, December 19, 2006

தமிழ் சினிமா பட பெயரை தமிழில் வைத்தால் வரிவிலக்கு!!!

முதல்ல ஒரு விளக்கம்: என்னடா இது, தமிழ் சினிமா பட பெயரை தமிழில் வைத்தால் வரிவிலக்கு என்கிற எப்பவோ முடிஞ்ச மேட்டருக்கு இப்ப பதிவு போடறானேன்னு திட்டாதீங்க. சோம்பேறித் தனம் அதிகமாப் போச்சு. கருத்து சொல்லியும் அலுப்பா இருக்கு. அதனாலே பதிவு போட்டே ரொம்ப நாளா ஆச்சு. ஆனாலும் ரவி, மதுசூதனன் இரண்டு பேருமே தங்கள் பதிவில் ரொம்பவும் ஃபீலிங்காக இது கருத்து சொல்லியிருந்தார்கள். சரி, ஆறுதலாக பின்னூட்டம் போடலாம் என்று கிளம்பி கடைசியில் அது ரொம்ப நீளமாக, சரி ஓய்ந்து கிடக்கிற நம்ம பதிவுக்கும் உயிர் கொடுப்போம்னு அப்படியே பதிவாப் போட்டுட்டேன்.அதனால் இந்த பதிவே அவர்கள் பதிவிற்கு இட்ட பின்னூட்டம் தான்.

சரி, இனி விஷயம்:

இந்த விஷயத்தில் வருத்தம் வெளியிடும் பலரும் இதில் இருக்கும் ஒரு முக்கிய பிண்ணனியை மறந்து விடுகிறார்கள்.

இதில் சினிமாக்காரர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது என்பது மட்டுமே நோக்கமில்லை. மருத்துவர் அய்யாவின் தொல்லை தந்திரங்களில் இருந்து தப்பிப்பதற்காகத் தான் இந்த முடிவையே கலைஞர் எடுத்திருக்க வேண்டும் என்பது என் கருத்து.

ஏற்கனவே போராட்டங்களை அதிகரிப்பதும்,அதன் மூலம் அசம்பாவிதங்களுக்கு வலை விரிப்பதும், அதன் பின் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று குரல் கொடுப்பதும் அரசினை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் தீட்டும் சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்று கலைஞருக்கு ஒரு பதட்டம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. வன்முறை அதிகரித்து விட்டது என்று பல மீடியாக்களில் செய்தி வருவதும் அந்த பதட்டத்தை அவருக்கு அதிகரிக்கிறது. அதனால் தான் உள்ளாட்சி தேர்தல் வன்முறைக்கு சால்ஜாப்பு சொல்வதிற்கு அவர் ரொம்பவும் மெனக்கெட வேண்டியிருந்தது.

அவரது துரதிர்ஷ்டம், கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியுமே அவருக்கு மன நிம்மதி அளிக்கும் விதத்தில் செயல்பட தயாராக இல்லை. எல்லோரும் பிளாக்மெயில் தந்திரத்தை உபயோகிப்பதால், ஒரு போர்க்கொடி செய்தியும், பிறகு மறப்போம் மன்னிப்போம் செய்தியும் கூட்டணிக் கட்சிகளிடையே வழக்கமாகி விட்டது. இந்த நிலையில் ராமதாஸ் மற்றும் திருமாவளவன் கைகோர்த்து நடத்தி வந்த இந்த 'தமிழ் காப்பு போராட்டம்' தனக்கு மிகுந்த சங்கடத்தை தரக்கூடும் என்பதும் அவருக்கு தெரியும். அவர்களை சமாதானப்படுத்துவது என்பது ஆகிற காரியமில்லை என்பதால், சினிமாக்காரர்கள் மறுக்கவே முடியாது என்னும் வகையிலான இந்த ஆஃபரை எடுத்து விட்டார் கலைஞர்.

சரி, இந்த ஆண்டு மட்டுமே 100 கோடிக்கும் மேலாக அரசாங்கத்திற்கு போக வேண்டிய, மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவிடப்பட வேண்டிய வரிப்பணம் பண முதலைகளிடமே திருப்பி விடப்பட்டு விடுகிறதே, இது மக்கள் விரோதம் இல்லையா?

தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்பது கேலிக்கூத்தாக இருக்கிறது என்பது அரசு நிர்வாகத்திற்கோ கலைஞருக்கோ தெரியாதா? இல்லை பலர் ஃபேஷனாக ஆங்கிலப் பெயரை சூட்டுகிறார்கள் என்றால், தமிழ்ப் படங்களுக்கு வேற்றுமொழியில் பேர் வைத்தால் வரி அதிகமாகச் செலுத்த வேண்டிவரும் என்றும் இதனை கட்டுக்குள் கொண்டுவரலாமே?

சினிமா மக்களை சீரழிக்கிறது என்று படப்பெட்டிகளை சேஸ் செய்த அரசியல் கட்சியினர், மக்கள் நலத்திற்கு செலவிடப்பட வேண்டிய கோடிக்கணக்கான வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது என்று குரல் கொடுக்கவும் இல்லை, இது போற்றப்படவேண்டிய திட்டம் என்று பாராட்டுப் பத்திரமும் வாசிக்கவில்லையே?

இப்படியெல்லாம் நீங்கள் கேட்பீர்களானால் ஐயோ பாவம், லாஜிக் தெரிந்த அளவுக்கு இந்த மனுசனுக்கு அரசியல் தெரியலையே என்று உங்கள் மேல் பரிதாபப்படத் தான் முடியும். இதற்குப் பேர் தான்ப்பா அரசியல்ல 'ராஜதந்திரம்'. இதெல்லாம், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ், பாமக என்று சூப்பர் கூட்டணிகட்சிகளின் ஆதரவோடு ஆட்சியில் இருந்தாத் தெரியும்.

ஐய்யோ, ஐய்யோ, இன்னும் சின்னப்புள்ளத் தனமாவேவா பேசிக்கிட்டிருக்கிறது!

2 comments:

Boston Bala said...

ஆங்கிலத்தில் தலைப்பு வைத்தால் 30% அதிக வரி என்று சட்டம் போட்டிருந்தால், எல்லாருக்கும் கேளிக்கையாக இருந்திருக்கும் : )

ஆதிபகவன் said...

"பலர் ஃபேஷனாக ஆங்கிலப் பெயரை சூட்டுகிறார்கள் என்றால், தமிழ்ப் படங்களுக்கு வேற்றுமொழியில் பேர் வைத்தால் வரி அதிகமாகச் செலுத்த வேண்டிவரும் என்றும் இதனை கட்டுக்குள் கொண்டுவரலாமே?"//

இது கலைஞருக்குத் தெரியாதென்றா நினைக்கிறீர்கள்! மக்கள் வரிப்பணத்தை பற்றி யார் கவலைப்பட்டது. நாளை தேர்தல் என்று வந்துவிட்டால் பிரச்சாரத்திற்க்கு சினிமா நட்சத்திரங்கள் அவசியமல்லவா.