சோவியத் ரஷ்யாவின் உடைவை அடுத்து சோசலிச வரலாறு முடிந்து விட்டது என்று அறிவிக்க அவசரப்பட்டவர்கள் பலர். அமெரிக்க பணம் உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் புகுந்து விளையாடி, அதன் மேல் உலக மக்கள் மயங்கிக் கிடந்ததும், அமெரிக்க மக்களும் தங்களது நாட்டின் மீதும் அரசாங்கத்தின் மீதும் பெருமை பூரித்துக் கிடந்ததுமாய் இருந்த ஒரு காலகட்டத்தில், அது உண்மை என்றே நம்ப வைக்கப்பட்டது.
ஆனால் மார்க்சியம் என்பது தனிநபர்கள் சார்ந்ததல்ல, தனி அரசாங்கங்கள் சார்ந்ததல்ல, மாறாக ஒட்டுமொத்த அங்கமாக மனித குலத்தின் அபிவிருத்தி சார்ந்தது என்கிற உண்மையை அறிந்தவர்கள் கூக்குரலிட்டாலும் அன்று அதைக் கேட்பவர் இல்லாமல் இருந்தது. இன்று நிலைமை மாறி விட்டது. அன்று நவீன உலகத்தில் சோசலிசம் குறித்து பேசுபவர்கள் கற்பனாவாதிகள் எனப்பட்டார்கள்.
தனியார் கைகளில் இருக்கும்போது தான் உற்பத்தி திறனும், தொழில்நுட்ப மற்றும் மனித குல முன்னேற்றமும் அதி உயர்வில் இருக்கிறது என்று சொன்ன அதே யதார்த்தவாதிகள் இன்று பில்லியன்கணக்கான டாலர்களைக் கொண்டு தனியார்களிடம் இருந்து திவாலாகிப் போன வங்கிகளை தேசிய உடைமையாக்கி பாதுகாக்கப் போவதாக மக்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார்கள். ஊக வணிகம் உச்சத்தில் இருக்கும் போது, அது ஒரு குமிழியாக இருப்பதை தவிர வேறு சாத்தியமில்லை, அதனை தடுக்க வேண்டும் என்று முயலாத இந்த பெரும் பொருளாதார மேதைகள் அந்த குமிழி உடைந்து குழப்பம் நேர்ந்து விட்ட சமயத்தில், குறைந்த கால விற்பனையை (shortselling) தடை செய்யலாமா என்று கலந்தாய்வு செய்கிறார்கள்.
அமெரிக்காவில், நாளுக்கொரு வங்கி திவாலாகிக் கொண்டிருக்க, அத்துறைகளில் பணிபுரியும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வாட, வங்கிகளில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் கைகளைப் பிசைந்து கொண்டிருக்க, நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் இருந்தவர்களோ பெரும் தொகைகளைக் கொடுத்து வழியனுப்பி வைக்கப்படும் அவலம் தொடர்கதையாய் ஆகி விட்டது.
உதடுகள் தாராளவாதம் பேசினாலும் உள்ளத்தில் இனவெறி கற்பிதத்தில் அமெரிக்கர்கள் ஊற வைக்கப்பட்டிருந்த ஒரு நிலையில், அந்த இனவெறியையும் தாண்டி மக்கள் ஒரு தீவிர மாற்றத்தை எதிர்நோக்கி, அதனை உறுதியளித்திருக்கும் ஒபாமாவிற்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் இருக்கும் அமைப்பிற்குள் ஒபாமா மட்டும் என்ன செய்து விட முடியும், அவர் செய்ய உண்மையாகவே துணிந்தால் கூட. அவரது பொருளாதார ஆலோசனை குழுவில் முதலீட்டு மேதை வாரன் பபெட்டும், கூகுள் தலைமை அதிகாரிகளில் ஒருவரும் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெற்று அமெரிக்க பொருளாதாரத்தை மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்தையே தூக்கி நிறுத்தட்டும், வாழ்த்துவோம். அதுவே அவர்கள் செய்யப் போவது சோதனை தான். இன்று சொல்லி நாளை நடக்கிற காரியம் அல்ல. ஆகலாம் குறைந்தது சில வருடங்கள்.
இதே தரப்பான சோதனையைத் தான் புஷ் நிர்வாகம் 700 பில்லியன் டாலர் மீட்பு தொகுப்பு என்பதாக ஹென்றி போல்சன் வசம் ஒப்படைத்திருந்தது. இந்தியரான காஷ்காரி அவருக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டார். ஏன்? பணத்திற்கு தேசியம் கிடையாது.
சரி, இப்போது உருவாக்கப்பட்டிருக்கும் குழு சிறந்த மேதைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாகவே கொள்வோம். சில வருடங்களில் அவர்கள் திரும்பவும் தூக்கி நிறுத்தட்டும். இங்கிலாந்தின் பொருளாதார தேக்கத்திற்கு அவர்கள் என்ன செய்வார்கள்? ஜேர்மனி, பிரான்சின் நிலைகளுக்கு அவர்கள் என்ன செய்வார்கள்? ஒவ்வொரு நாட்டின் நிலையும் ஒட்டுமொத்தமாக நம் எல்லோரையும் பாதிக்கத் தானே செய்கிறது. அப்படியானால், எல்லா நாட்டிலும் இது போன்ற தலைவர்கள் வேண்டி நாம் யாகம் செய்ய வேண்டியது தானா?
நம் ஊரில் மூன்று ரூபாயாக இருந்த தேநீர் திடீரென 4 ரூபாய் ஆனது. கேட்டால் பீப்பாய் விலை உயர்ந்து விட்டது என்றார்கள். இது நிகழ்ந்தது ஆகஸ்டு மாதம். அக்டோபரில் அதே பீப்பாய் விலை பாதிக்கும் பாதி குறைந்து விட்டதே. ஏன் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. ஒவ்வொரு விஷயத்திற்கும் கூக்குரல் தொடர்ந்து ஒலித்தாலே நடவடிக்கை எடுக்கப்படாத நிலை. இந்த இலட்சணத்தில் நம் சாதாரண கண்களுக்கு புலப்படாத எத்தனை விஷயங்கள். எல்லாவற்றிலும், மேலிருக்கும் அதிகாரத்தில் இருக்கும் இந்த தயாள உள்ளங்களை, கருணை உள்ளங்களை, நிர்வாக மேதைகளை நாம் நம்பியிருக்க வேண்டியது தானா? அதிகாரத்துவத்தில் இருக்கும் இவர்களுக்கு தான் என்ன இலட்சியம்? ஓ! மனித குலமே! நீ என்ன ஒரு தேக்க நிலையில் இருக்கிறாய். இத்தனை ஆடம்பரங்கள் இருந்து என்ன பயன். தினந்தோறும் இலட்சக்கணக்கான மக்கள் பசியிலும், பாதுகாப்பின்மையிலும் உறங்கிக் கொண்டிருக்க சந்திரனுக்கு ராக்கெட் விட்டதில் பெருமிதம் கொள்ள என்ன இருக்கிறது? அதனை மாற்றுவதற்காகத் தான் நாங்களெல்லாம் அல்லும் பகலும் அரும்பாடுபட்டு உழைத்து வருகிறோம் என்றா உழைத்துக் களைக்கிறார்கள். அவர்கள் அதிகாரத்துவ சுகம் கண்டவர்கள், காண்பவர்கள். பதவி என்பது அவர்களுக்கு அரசாங்க உத்தியோகம். நம் குடும்பத்திற்கு தேவையானவற்றை ஏற்பாடு செய்து கொள்ளலாம். அவர்களை பதவியில் உட்கார வைக்கலாம். தலைமுறை தலைமுறைக்கு பணத்தை சேர்த்து வைக்கலாம். குற்ற உணர்ச்சியில் இந்த பிறவியிலும் இன்பம் அனுபவிக்காமல், ஏராளமான ஏழைகள் மற்றும் உரிமை காட்டிக் கொடுக்கப்பட்டோர் சாபத்தில் வரும் ஜென்மங்களிலும் அவர்கள் கீழான நிலையை அடையலாம். இதைத் தவிர அவர்கள் வாழ்க்கையில் என்ன பெரிய சிந்தனை அல்லது சாதனை இருக்கிறது? இந்த மண்புழு வாழ்க்கைக்கு அவர்கள் அடித்துக் கொள்வதைப் பார்த்தால், "வேடிக்கை மனிதர்கள்" என்னும் பாரதியின் கூற்று நினைவுக்கு வராமல் இருக்குமா?
பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு சாதனை பற்றிப் பேசுபவர்களிடம் பேருந்து நிறுத்தத்தில் நம் கால்களைப் பிடித்துக் கொண்டு விட மறுக்கும் 4 வயது புத்திசாலி பிச்சைக்கார சிறுவனின் துன்புறுத்தலை நாம் சொல்லியழ முடியுமா? சமத்துவபுரம் கண்டவர்களிடம் உத்தபுரம் பற்றி திறந்த விவாதத்தை தான் நாம் கோர முடியுமா? இவர்களின் சாதனைகள் அறிக்கைகளில் இருக்கும். மனித குலத்தின் அபிவிருத்தியில் இருக்காது.
பிச்சைக்காரர் ஒழிப்பு, குழந்தை தொழிலாளர் கொடுமை நீக்கம், சாதி ஒழிப்பு, இனவெறி ஒழிப்பு, பசி பட்டினி ஒழிப்பு, இலஞ்ச ஒழிப்பு அனைத்துக்கும் தனித்தனி கமிஷன்கள் போடப்பட்டு பல ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஓய்வின்றி உழைத்து பாவம் அவர்கள் காலம் முடிந்திருக்கிறதே அன்றி இந்த பிரச்சினை ஓய்ந்த பாடில்லை. ஏனென்றால் பிரச்சினை கட்டிடத்தில் அல்ல, அஸ்திவாரத்தில் என்பது அவர்களுக்கு புரியவில்லை. ஏனென்றால் அவர்களும் இந்த அமைப்பால் வார்த்தெடுக்கப்பட்டவர்கள் தான். ஒட்டுமொத்தத்தில் இவர்கள் முட்டாளாக்குவதென்னவோ மக்களைத் தான்.
அதனால் தான், மார்க்ஸ் சொன்னார், தங்களின் உரிமை குறித்த நனவு தொழிலாளர்களிடம் இருக்கும் மட்டும் தான் ஒட்டுமொத்த மனித குலத்துக்குமான சரியான அமைப்பு உருவாக்கப்பட முடியும், பாதுகாக்கப்பட முடியும் என்று. இந்தியாவிலும் சரி உலகெங்கிலும் சரி தொழிற்சங்க தலைமைகள் மற்றும் கட்சிகளின் காட்டிக் கொடுப்பினால் இன்று தொழிலாளர் வர்க்கம் அந்த நனவினை பறிகொடுத்த நிலையில் பரிதாபமாக நிற்கிறது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 2000 பேர் ஒரே நாளில் அதிரடியாக வேலைநீக்கம் செய்யப்பட்டு, பின் மறுநாள் அரசியல் நெருக்குதலின் பேரில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டார்கள். அந்த தொழிலாளர்களோ என்ன நடக்கிறது என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில், ராஜ் தாக்கரே உள்ளிட்ட வலது சாரிகளின் வாசலைத் தட்ட நேர்ந்தது. பிற முதலாளிகளும் கூட, "இதெல்லாம் பக்குவமா செய்ய வேண்டிய வேலை, இப்படியா நாலுபேர் நம்மளை பேசற மாதிரி நடந்து கொள்வது" என்பது போல ஜெட் ஏர்வேஸ் அதிபரை கண்டிக்க தலைப்பட்டார்கள். வேலைக்கு மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களில் ஒருவர் சொன்னார், "இப்போதும் நாங்கள் முழுமையாக பாதுகாப்பு உணர்வுக்கு வந்து விடவில்லை. என்ன இனிமேல் ஒருநாளில் தூக்க மாட்டார்கள். ஓரிரு மாதம் கெடு கொடுக்கும் அளவு இரக்கம் காட்டுவார்கள்" என்று.
மென்பொருள் உருவாக்க நிறுவனங்களை பொறுத்தவரையில் சத்யம் நிறுவனத்தில் நடந்தது மட்டும் தான் வெளிப்படையாக வந்தது. இன்னும் ஏராளமான நிறுவனங்கள் சத்தமில்லாமல் இந்த வேலையைச் செய்கின்றன. பல்வேறு வகையாக இந்த செலவுக் குறைப்பு மேற்கொள்ளப்படுகிறது. செயல்திறன் அடிப்படையில் கீழ்நிலை பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவது என்பதும், மற்றவர்களின் சம்பளத்தை 'மறுகட்டமைப்பு' செய்வது என்பதும் தான் இதன் அடிநாதமாக இருக்கிறது. ஆனால் இந்த செலவுக் குறைப்பில் எல்லாம் நிறுவனத்தின் உயர் பதவிகளில் இருக்கும் ஒரு சதவீதம் பேர் கருத்தில் கொள்ளப்படுவார்களா என்பதற்கு பரவலாக எங்குமே விடை காண முடிவதில்லை. முடிவு மேற்கொள்ளும் நடைமுறையில் அவர்கள் தானே இருக்கிறார்கள். அவர்கள் மேற்கொண்ட முடிவுகளால் தானே நிறுவனம் இப்படி எதிர்மறை திசைக்கு போயிருக்க வேண்டும். குறைந்தபட்சம் அவர்கள் முன்கூட்டியே எச்சரித்தாவது இருந்திருக்க வேண்டுமல்லவா? என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள். அவர்களுக்கு பிடிக்காது. அது தான் முதலாளித்துவம். அந்த சூட்டினை மன்மோகன்சிங்கே சற்று காலத்திற்கு முன் வாங்கியது உங்களுக்கு நினைவிருக்கலாம். (தலைமை நிர்வாக அதிகாரிகள் எல்லாம் சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தது). அவர் ஒரு அய்யோ பாவம் ஆசாமி. அவரை விடுவோம்.
இடவாரத்தில் குடவாரமாக, இப்போது மின்வெட்டினால் நிகழும் வேலை இழப்பு வேறு. நமது மோசமான நிர்வாகம் இந்த நெருக்கடியான சமயத்தில் தானா வேலையைக் காட்ட வேண்டும். ஏற்கனவே வாங்கும் அமெரிக்கர்களிடம் துட்டு இல்லாமல் போனதில் இங்கிருக்கும் (சீனாவிலிருக்கக் கூடியதும்) ஏற்றுமதியாளர்கள் எல்லாம் அமெரிக்கர்கள் கையில் எப்படி பணம் வரச் செய்யலாம் என்ற யோசனையிலோ அல்லது எப்போது தான் அவர்கள் கையில் பணம் வரப் போகிறதோ என்கிற கவலையிலோ இருக்க, உற்பத்தி குறைந்து ஏற்றுமதியில் பெரும் சரிவு நிகழ்ந்திருக்கிறது. இந்த சமயத்தில் நமது அய்யாக்கள் வேறு மின்சார நிர்வாகத்தை "எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்தில் சரியா வர மாட்டேன்" என்று ரஜினி ஸ்டைலில் நடத்தினால் பாவம் உழைக்கும் மக்கள் எங்கு தான் போவது?
இன்னும் இதுபோல் நிகழ்வுகள் தொடர்கதையாகி, சமூகத்தில் கொந்தளிப்பை படிப்படியாக அதிகப்படுத்தி வருகின்ற சூழலில், சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு வலது சாரி கும்பல்களும் தேசியவாத தலைமறைவுக் குழுக்களும் இந்த முதலாளியைக் குத்து, அந்த மாநிலத்துக்காரனை வெட்டு என்று கிளம்பி நம் உயிரெடுக்கிறார்கள்.
இந்த நிலையில், மனித குலத்தின் அபிவிருத்தி இந்த கூச்சல்களிலும் குழப்பத்திலும் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக தேங்கி நிற்கிறது. இதிலிருந்து வெளிவருவதும், மனித சமுதாயத்தை அதன் நடப்பு அவலங்களில் இருந்து மீட்டு முன்னெடுத்து செல்வதும் தொழிலாளர் வர்க்கம் அல்லது உழைக்கும் வர்க்கத்தின் நனவான சிந்தனைகளில் தான் எழ முடியும். உலகெங்கிலும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் சாதாரண உழைக்கும் மக்களாகத் தான் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த நனவைக் கொண்டு செல்வது என்பது தொழிலாளர் வர்க்கத்தின் முன்னேறிய பிரிவினரால் மட்டுமே சாத்தியப்படும். அதற்குத் தேவை நிறுவனங்களில் மலிவு உழைப்பை வழங்க நிர்ப்பந்திக்கப்படாத சிறப்புரிமையை தமது திறனால் ஈட்டியிருக்கும் உண்மையான சிந்தனை மேம்பட்ட புத்திஜீவி தொழிலாளர்கள். ஒருவேளை அவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், மனித குல வரலாறு உங்கள் தோள் மீதும் தாங்கப்பட்டிருக்கிறது என்பதை மறவாதீர்கள். நாம் இழப்பதற்கு எதுவுமில்லை, பெறுவதற்கு இந்த உலகமே இருக்கிறது என்று மார்க்ஸ் விடுத்த அழைப்பில் இருந்து நாம் சில அடிகளும் முன்செல்லாமல் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்வோம்.
நம் வாழ்நாளுக்குள் அத்தகையதொரு உலகைக் காணும் கனவினைக் காணுவோம். அந்நாள் வரையிலும் மட்டும் ஒபாமாக்கள் கொண்டுவரும் சின்ன சின்ன மாற்றங்களில் மகிழ்ச்சி கொள்வோம்.
(பின்குறிப்பு: இந்த கட்டுரை எழுதுவதற்கான தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்திய
www.wsws.org/tamil தளத்திற்கு நன்றி).