Friday, November 14, 2008

வெள்ளிக் கரண்டி தலைவர்கள்

மின்வெட்டிற்காக தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களை அறிவிக்கும் முன்னாள் முதல்வரின் போயஸ் கார்டன் வீட்டில் மட்டும் இரு மாதங்களுக்கான மின்சார பில் ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 468 ரூபாய் என்றும், தற்போதைய முதல்வரின் வீட்டில் இது 15 ஆயிரம் என்றும் சட்டசபையில் மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி புள்ளிவிவரம் அளித்திருக்கிறார்.

வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர் என்று தத்தமது தலைவர்களைக் கொண்டாடும் தொண்டர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியளிக்காமல் பெருமிதமளிப்பதாய் இருக்கக் கூடும். ஆனாலும் மின்சாரப் பயன்பாட்டைப் பொறுத்தவரை, தனிநபர் மின்சாரப் பயன்பாட்டில் ஏற்பட்ட அதீத வளர்ச்சி தான் பலரின் பிழைப்பிலும் மண்ணைப் போடத் துவங்கியிருக்கும் இப்போதைய மின்வெட்டுக்கு காரணம் என்பதை அனைவரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அதீதமான பணப்புழக்கம், அதனால் தனிநபர் வாங்கும் திறன் அதிகரிப்பு இவற்றின் காரணமாக ஒவ்வொரு வீட்டிலும் பல்வேறு விதமான மின்சார சாதனங்களும் கடந்த 10 வருட காலத்தில் குறைந்தபட்சம் 40 சதவீதம் வரை அதிகரித்திருக்கின்றன. தொழில்துறை நுகர்வும் இதே அளவு வளர்ச்சியைக் கண்டுள்ளது. (தொழில்துறையைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் செலவுக் குறைப்பு என்கிற அடிப்படையிலேனும் முதலாளிகளால் மின்சார சிக்கனம் கடைப்பிடிக்கப்படுகிறது.)

எதிர்வினை நடவடிக்கைகள் (இதனை கம்யூனிச பதத்தில் பிற்போக்குத்தனம் என்கிறார்கள்) மட்டுமே பழக்கமான நமது தலைவர்கள் தேவையின் அதிகப்பாட்டிற்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று முன்கூட்டி சிந்திப்பார்கள் என்று எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகம் தான். அப்படி யோசிப்பவர்களாக இருந்தால் வாகன விற்பனை அதிகரிக்கும்போதே டிராபிக் நெரிசல் குறித்து யோசிக்கக் கூடியவர்களாக இருந்திருப்பார்கள். சிறுசிறு மாணவர் மோதல்களின் போதே அது சமுதாயத்தில் ஏற்படுத்தக் கூடிய பின்விளைவு அறிந்து அவற்றைக் களைய முனைந்திருப்பார்கள்.

மின்சாரத்தைப் பொறுத்தவரை, நானோ தொழில்நுட்பம் தான் இந்தியாவுக்கு மற்றும் உலக நாடுகளுக்கும் கூட நிரந்தரத் தீர்வு தரக் கூடும். நமது விஞ்ஞானிகள் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புவதோடு சேர்த்து இது போன்ற சமுதாய அபிவிருத்திகளுக்கும் கொஞ்சம் தங்கள் அறிவியல் அறிவைச் செலவழித்தால் நல்லது. அதுவரை நாம் ஆற்காட்டார் போன்றவர்களின் நிர்வாகத் திறமின்மைகளை சகித்தாகித் தான் தீர வேண்டியிருக்கும்.

ஆனால் அந்த காலம் வரையாவது பாட்டாளிகளுக்காகவும், ஏழைகளுக்காகவும் 24 மணி நேரமும் பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள் எல்லாம் தாங்கள் உண்மையாகவே மக்களுக்கு இப்போதும் சேவை செய்ய முடியும் என்பதையும், அது தங்கள் பொறுப்புணர்ந்து நடப்பதன் மூலமே சாத்தியம் என்பதையும் புரிந்து கொள்வார்களாக. அறிக்கை விடுங்கள். ஆர்ப்பாட்டம் நடத்துங்கள். அதற்கு முன் அநாவசியமாக ஓடும் ஏசியை அணைத்து விட்டீர்களா என்பதைப் பாருங்கள். ப்ளீஸ்!

No comments: