Thursday, November 20, 2008

கேலிக்குள்ளாகியிருக்கும் நிதியமைச்சரின் வேண்டுகோள்

ரியல் எஸ்டேட், வாகனத்துறை மற்றும் ஏர்லைன்ஸ் ஆகிய துறைகள் விலைக்குறைப்பு செய்ய வேண்டும் என்று நிதி அமைச்சர் சிதம்பரம் விடுத்த வேண்டுகோள் தொழில்துறையினரிடையே அதிருப்தியையும், விமர்சகர்களிடையே கேலியையும் உண்டாக்கியிருக்கிறது.

உடனடியாக எதிர்வினையாற்றிய ரியல் எஸ்டேட் துறை நிறுவனமான டிஎல்எப் தலைவர், ரியல் எஸ்டேட் துறை ஏற்கனவே கடந்த ஆறு மாத காலத்தில் (சென்னையும், ஹைதராபாத்தும் தவிர்த்து பிற மெட்ரோக்கள் உள்பட அனைத்து வட இந்திய பகுதிகளிலும் இது வெளிப்படையாக காணப்படத் துவங்கியது. பங்குச் சந்தையிலும் பிரதிபலித்தது) வீழ்ச்சியுறத் துவங்கி பரிதாபமான நிலையில் இருக்கின்ற சூழலில் இனி எங்கு குறைப்பது என்றார். மாறாக அரசாங்கம் தான் கடனுதவி மூலம் பணப்புழக்கத்தை அதிகரித்து வாங்கும் தேவையை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்றார்.

வாகனத் துறைக்கு பஜாஜ் தலைவர் இதே போன்றதொரு கருத்தை பிரதிபலித்தார். வாகன விற்பனை ஏற்கனவே சரிவைச் சந்தித்து இருக்கும் வேளையில், விலையைக் குறைத்தால் இன்னும் அல்லவா நஷ்டம் அதிகரிக்கும் என்றார் அவர். ஒருவேளை எல்லா நிறுவனங்களும் ஒருசேர விலைகுறைப்புக்கு ஒத்துக் கொண்டால் கூட நிறுவனங்களின் சந்தைப் பங்களிப்பு நிலை இந்த வேறுபட்ட விலைகுறைப்பால் குளறுபடிக்குள்ளாகும் அல்லவா என்று மேலும் குழப்பினார் அவர்.

ஏர்லைன்ஸ் துறையில் அவர்கள் சலுகைகளை எதிர்பார்த்திருந்ததால் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் சொல்லி விடவும் கூடாது என்பது போல் விமான எரிபொருளை 'அறிவிக்கப்பட்ட பொருட்கள்' பட்டியலில் சேர்க்க அரசாங்கம் ஆலோசிப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான 4 சதவீத விற்பனை வரி அவற்றின் மீது விதிக்கப்படுமாம். முன்னர் இது 21 சதவீதம் வரை இருந்ததாம். ஜெட் ஏர்வேஸ் 2000 பேரை பணிநீக்கம் செய்த சமயத்தில் அரசாங்கம் ஏற்கனவே விமான எரிபொருளில் ஏற்கனவே பல சலுகைகளை அறிவிருத்திருந்தது என்பது நினைவிருக்கலாம். அதாவது எரிபொருள் கடன் செலுத்தும் காலம் இரண்டு வாரங்களில் இருந்து 6 மாத காலமாக ஆக்கப்பட்டிருக்கிறது. 5 சதவீத கலால் வரி நீக்கப்பட்டிருக்கிறது. அதனால் விமானக் கட்டணம் கட்டாயம் குறைக்கப்படும் என்று அரசாங்கம் சொல்கிறது. நடக்க வேண்டும். இதுவாவது தேர்தல் வரை காத்திருக்காது என்று நம்புவோம்.

இன்றைய டெக்கான் கிரானிக்கிளில் நிதியமைச்சரின் வேண்டுகோள் குறித்து வந்திருக்கும் இரண்டு கார்ட்டூன்கள் இங்கே: (சிதம்பரம் ஹாலந்து பறந்து விட்டார். அதனால் அவர் இது குறித்து கவலைப் பட வேண்டியிருக்காது)





சிலபல மாதங்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன்சிங் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகள் தங்கள் சம்பளத்தைக் குறைத்து கொள்ள வேண்டும் என்று பேசி தொழில்துறையினரிடமும் ஊடகத்திடமும் எவ்வளவு கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார் என்பது அறிந்த விஷயம். அவரது அடியற்றி இப்போது சிதம்பரம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆக இது

"அண்ணன் காட்டிய வழியம்மா,
'அன்பால்' விளைந்த பழியம்மா".

No comments: