Saturday, April 18, 2009

சமரசம் உலாவும் இடமே...

நம் வாழ்வில் காணா சமரசம் உலவும் இடமே என்று சுடுகாட்டில் பாடும் பழைய புகழ்பெற்ற பாடல் ஒன்று உள்ளது.

ஆனால் வாக்குமேடைகளும் இந்த விஷயத்தில் சமரசத்திற்கு சளைத்தவையல்ல என்பதை நாடெங்கிலும் தேர்தல் பிரச்சாரம் நமக்குக் காட்டி வருகிறது.




இந்த மேடையின் இணைந்த கைகளுக்குப் பின்னால் இருக்கும் சமரசங்கள்:

1. கடைசி வரை முயற்சி செய்தும் காங்கிரஸை முழுவதுமாய் இழுக்க முடியாததால், வேறு வழியின்றி, தானும் பிரதமர் வேட்பாளர் தான் என்று கூறினால் தோழர்கள் கையைப் பிசைய வேண்டியது வரும் என்று புரிந்து, சரி இப்போதைக்கு தானே என்று ஜெ. செய்து கொண்டுள்ள சமரசம்.

2. காங்கிரஸை இழுத்து அது கூட கூட்டணி போட்டிருந்தா சகோதரி, கலைஞர் ரெண்டு பேருக்கும் ஒருசேர பாடம் கற்பிச்சுருக்கலாம், நடிகருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கலாம்னு பார்த்தா, இந்த காங்கிரஸ்காரங்க, சே, அதிலே ஒரு கோஷ்டி கூட, அதுக்கு ஒத்து வர மாட்டேங்குதே, நிருபருங்க, நடிகர் எல்லாம் நம்மளை கேவலமா பேசற மாதிரி ஆயிட்டுதே, சரி வேற வழியில்ல, ஈழத்தமிழருக்காக பாடுபடவும், சமச்சீர் கல்வி கொண்டு வரவும், தமிழ் வளர்ப்புக்கும் சகோதரியை நம்பலாம், குறைந்தபட்சம் நடக்கலேன்னா கூட பழி நம்ம மேல விழாது என்று மருத்துவர் அய்யா செய்து கொண்டுள்ள சமரசம்.

3. பொடா சட்டத்தில் உள்ளே போட்டது கூட பழைய கதை என்று விட்டு விடலாம். ஆனால் கூடவே இருந்த எனக்கு நாலு சீட் வாங்கறதுக்கு நாக்கு தள்ளிடுச்சே....இது தான் நல்லவர்க்கும், நாவன்மையாளர்க்கும் காட்டுகிற பிரதியுபகாரமா? என்று கொந்தளித்த மனதை கட்டுப்படுத்தி, 'கூட்டணியைப் பற்றியோ அரசியல் பற்றியோ பேசும் மனநிலையில் நான் இல்லை' என்ற விரக்தியில் இருந்து சற்று மீண்டு யதார்த்தத்துடன் வைகோ மேற்கொண்டுள்ள சமரசம்.

4. காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணியை அமைப்போம், என்றாலும் தேர்தலுக்கு பின் காங்கிரஸ்க்கு ஆதரவளிக்கும் வாய்ப்பை புறந்தள்ளி விடவில்லை, தவிர பதவி இல்லாமல் இருந்தது போதும், உருவாகவிருக்கும் அமைச்சரவையில் நாங்கள் பங்கேற்கலாம் என்றெல்லாம் கொள்கைப் பிடிப்பில் கோலோச்சிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டு தோழர்கள் பாட்டாளி வர்க்கத்தின் உண்மையான பிரதிநிதியான ஜெயலலிதாவுடன் செய்து கொண்டுள்ள சமரசம்.

இது வாக்குவங்கி சமரசம். இவற்றின் குறைந்தபட்ச ஆயுட்காலம் தேர்தல் தேதி வரை. அதற்குப் பின்.....? 

அது அவர்களின் ராஜதந்திரத்திற்கான காலம்......பயந்து விடாதீர்கள். மனதை தளர்வாய் வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் எது செய்தாலும் உங்கள் நன்மைக்காகத் தான் செய்கிறார்கள்.

1 comment:

Tamil News said...

அழகான விடையத்தை பார்க்க முடிந்தது
மிக்க நன்றி.
Tamil News