Wednesday, October 12, 2005

புலி வாலைப் பிடித்த இந்திய கிரிக்கெட் வாரியம்


சேப்பல் கங்குலிக்கு இடையே துவங்கிய பிரச்சினையை யாருமே நம்ப முடியாத துரிதத்தில் சுமூகமாக்கி "எல்லோரும் நல்லவரே,தவறு மேல் தான் தவறு" என்பது போல் சில பேட்டிகளும் கொடுக்கப்பட்டு விட்டன. மீடியா உலகமும் அடுத்த திடுக்கிடும் செய்திகளை நோக்கி தன் கவனத்தை திருப்பி விட்டது. 'சச்சின் தென்டுல்கர் சேலஞ்சர் கோப்பையில் விளையாடுகிறார். எல்லாம் இன்பமயம்' என்பது போல ஒரு மாயை உருவாக்கப்பட்டு விட்டது. பிரச்சினைகள் முடிந்தா விட்டது? உண்மையில் இப்போது தான் பிள்ளையார் சுழியே போடப்பட்டிருக்கிறது. இதில் நகைச்சுவையான விஷயம் என்னவென்றால் உண்மையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்குக் கூட கிரிக்கெட் வாரியம் இதுவரை பதிலளிக்கவில்லை என்பது தான்.

முதலில் "நடந்தது என்ன? " என்பதே யாருக்குமே புரியவில்லை. சேப்பல் என்னடாவென்றால் கங்குலி மீது ஆயிரம் புகார்களை அடுக்கி விட்டு இ-மெயில் வெளியானது ஏமாற்றமளிப்பதாக பேட்டியளித்தார். கங்குலியோ அத்தனை புகார்களும் பொய் என்று கூறி விட்டு சேப்பலே தான் இமெயிலை பத்திரிகையாளர்களுக்கு அனுப்பி விட்டு நாடகமாடுகிறார் என்று கூறி திடுக்கிட வைக்கிறார். இத்தனை அமளிதுமளிகளுக்கிடையே கூடிய ஆய்வுக் கமிட்டியோ கண்ணை மூடிக் கொண்ட பூனை போல இது சரியாக புரிந்து கொள்ளப்படாத தொடர்பால் வந்த பிரச்சினை என்று ஒரு பூசணித் தோட்டத்தையே சோற்றுக்குள் மறைக்க முயற்சி செய்கிறது. சரி பழைய கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு வீரர்களிடையே இருக்கும் பழக்கத்தால் அவர்களுக்கு உண்மை தெரிந்திருக்கும், அவர்கள் நமக்கு நடந்ததைத் தெளிவுபடுத்துவார்கள் என்று நினைத்தால் அவர்களோ பெரிய இடத்துச் சமாச்சாரம் என்பது போல கருத்துச் சொல்லத் தயங்கி மென்று முழுங்குகிறார்கள்.

அவரவர்களாக உண்மையைச் சொன்னாலொழிய தள்ளி விட்டாரா? தாங்கிப் பிடித்தாரா ? என கருணாநிதி கைது விவகாரத்தைப் போல் நமக்கு கடைசிவரை உண்மை தெரியப் போவதில்லை. அதற்காக நம்மால் சும்மா இருக்க முடியுமா என்ன? நம்முடைய யூகக் குதிரையைத் தட்டி விட்டால் என்ன நடந்திருக்கலாம், நடந்திருக்கும் என்று அது சொல்லி விட்டுப் போகிறது.

முதலில் ஒரு விஷயம். குழந்தைகள் போல் கங்குலியும் சேப்பலும் போட்டுக்கொண்ட சண்டையை கங்குலியே துவங்கியதாக வைத்துக் கொண்டாலும், இந்திய வீரர்களை "பக்கா புரொபஷனல்களாக" ஆக்குவதற்காகத் தான் சில முன்னாள் வீரர்களின் எச்சரிக்கையையும் மீறி சேப்பலை பயிற்சியாளராக கிரிக்கெட் வாரியம் நியமித்தது. ஆனால் தானே ஒரு "புரொபஷனல்" பயிற்சியாளர் இல்லை என்பதை ஆரம்பத்திலேயே சேப்பல் நிரூபித்திருக்கிறார். மிகை லட்சியம் ( டிஎநசயஅbவைiடிரளநேளள) அல்லது சிலர் சொல்வதைப் போல் மறைமுகத் திட்டங்கள் ( hனைனநn யபநனேய ) இல்லாவிட்டால் அவர் கீழ்க்கண்ட தவறுகளைச் செய்திருக்க முடியாது.
( 1 ) ஒரு கிரிக்கெட் தொடர் போட்டிக்காக ஒரு கேப்டனைத் தேர்வு செய்திருக்கும்போது அந்தத் தொடரின் முதல் ஆட்டத்திலேயே அந்த கேப்டனின் ஆட்டத்தில் கேள்வி எழுப்புவது என்பது அபத்தமான அபத்தம். கேப்டனின் தற்போதைய திறமை மீது அவருக்கு சந்தேகம் இருந்தால் அணித் தேர்வுக்கு முன்னதாக தேர்வுக்குழுவுடன் அதுகுறித்து விவாதித்து அதற்கான வழிவகைகளைக் கண்டிருக்க வேண்டும். இவர் தான் இந்த பயணத்திற்கு கேப்டன் என்று முடிவு செய்யப்பட்ட நொடியிலேயே அந்த சிந்தனை அத்துடன் முடிந்து விட வேண்டும். அதற்குப் பிறகு கொடுத்துள்ள கேப்டனுடன் இணைந்து சிந்தித்து பயணத்தில் வெற்றி பெற முயல வேண்டும். அதை விடுத்து இவர் விரும்பாத ஒருவர் கேப்டனாக இருந்தால் அவரை பாதி பயணத்தில் இவர் நெருக்கடி கொடுத்ததை சரி என்று எடுத்துக் கொண்டால், நாளைக்கே அணியில் தேர்வாளர்கள் சர்ச்சைக்குரிய ஒரு இளம் வீரரைத் தேர்வு செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவரைத் தேர்வு செய்தது சேப்பலுக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த வீரரிடம் போய் 'உனக்குத் திறமை பத்தாது, வேறு வீரருக்கு வாய்ப்புக் கொடுக்கலாம்' என்று பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பாரா? ஒரு தேர்வுக்குழுவின் பெரும்பான்மையினர் ஒரு பணியாளரை தேர்வு செய்த பின்பு அவர்களில் ஒருவருக்கு அந்தத் தேர்வில் உடன்பாடில்லாமல் அந்தப் பணியாளர் வேலை செய்யும் நேரத்தில் வந்து அவரை அவமானப்படுத்தினால் எப்படி இருக்கும் ? இந்த கேலிக் கூத்தை எந்த தொழில் முறை பயிற்சியாளர் செய்வார்?
(2) இந்த விஷயத்தில் அவர் காட்டிய அவசரத்தை அமெச்சூர் (தொடக்க நிலை) வீரர்கள் கூட பின்பற்ற மாட்டார்கள் என்பது நிச்சயம். தொடரின் ஆரம்பத்திலேயே கங்குலியை தவறாக நடத்தியது, தொடர் முடிந்தும் முடியாமலும் அவசரஅவசரமாக ஒரு இமெயிலை கிரிக்கெட் வாரியத்திற்கு ( ஜர்னலிஸ்டுகளுக்கு ? ) அனுப்பி வைத்தது, அவசர அவசரமாக பிளேயர்களுக்கிடையே பிளவினை வளர்த்தது எல்லாவற்றிலும் அவசரம் காட்டியவருக்கு பதறிய காரியம் சிதறிப் போகும் ( ழயளவந ஆயமநள றுயளவந ) என்கிற பழைய பழமொழி ஞாபகத்திற்கு வராமலா போயிருக்கும் ?

இவையெல்லாம் சேப்பல் நல்லுணர்வோடு தான் செய்திருப்பார் என்று நம்ப முடியாத விதத்தில் அவரது பழைய சில நிகழ்வுகள் இருப்பது தான் யோசிக்க வைக்கிறது ? அவர் அதிக திறமையைப் போலவே அதிக சுயகர்வமும் கொண்டவர் என்பதை பலரும் ஒப்புக் கொள்வது ஒரு குறிப்பிடத்தகுந்த விஷயம்.

ஏதோ இப்படியெல்லாம் நாம் சொல்வதனால் கங்குலிக்கு நாம் வக்காலத்து வாங்குவதாக அர்த்தமில்லை. ஏனென்றால் கங்குலியின் சமீபத்திய ஆட்டத்திறனுக்கு அவர் குறித்து வரும் நகைச்சுவைத் துணுக்குகளே சான்று. ஏற்கனவே சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் அவர் எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவது போல உலகின் அதி பலவீனமான அணியிடம் தான் எடுத்த சதத்தைக் கூறி தன் பலத்தை வெளிக்காட்ட வேண்டிய அவலநிலைக்கு ஆளாகி விட்டார். சரி சேப்பல் சமயம் பார்த்து விளையாடுகிறார், நமது சூழ்நிலை சரியில்லை என்றெல்லாம் உணர்ந்து அப்போது அடக்கி வாசித்து விட்டு இலங்கைக்கு எதிரான போட்டிகளிலோ அல்லது விரைவில் வர இருக்கும் பாகிஸ்தான் பயணத்திலோ வெளுத்து வாங்கிவிட்டு பிறகு சேப்பலின் மோசடி வேலைகளை அம்பலத்திற்கு கொண்டு வந்திருப்பதால் கங்குலி ஜெயித்திருப்பார் என்பதை விட இந்தியாவின் கிரிக்கெட் பிழைத்திருக்கும். ஆனால் இவரோ தவளை தன் வாயால் கெடும் என்பதைப் போல தேவையில்லாமல் ஓய்வு அறையில் நடந்த விவகாரங்களை முதலில் பேட்டியைக் கொடுத்து விட்டு கடுமையான நெருக்கடியில் மாட்டிக் கொண்டு விழிக்கிறார். இப்போது என்ன ஆயிற்று, இனி அணி சிறப்பாக விளையாடினாலும் படு மோசமாக விளையாடினாலும் சேப்பல் நான் அப்போதே சொன்னேனே என்று சொல்லப் போகிறார், அது மட்டுமல்லாமல் இப்போது எதிரணி வீரர்கள் மட்டுமல்லாமல் நெருக்கடியும் சேர்ந்து கங்குலிக்கு எதிராக விளையாடி அவரின் ஆட்டத்திறனை மேலும் பரிசோதிக்கும் ( இந்த அக்கினிப் பரீட்சையில் அவர் ஜெயித்தால் அப்போது அவரின் அத்தனை செயல்களும் நியாயப்படுத்தப்படும் ), வழக்கமாகவே கங்குலி அவ்வப்போது சர்ச்சைக்குரிய முடிவுகள் எடுப்பது வழக்கம் ( உதாரணம் சச்சினை நடுநிலை ஆட்டக்காரராக்கி முயற்சி செய்தது, முரளி கார்த்திக்கின் மீது நம்பிக்கை கொள்ளாதது ) , ஆனால் வெற்றி பெற்றவரை அவை அதிகமாக விமரிசனத்துள்ளாகவில்லை. அதே முடிவுகள் தோல்வியுற்றால் இனி கடுமையாக விமரிசிக்கப்படும். ஆப்பசைத்த குரங்கைப் போல ஆகி விட்டது கங்குலியின் நிலை.

இவர்கள் இப்படியென்றால் கிரிக்கெட் வாரியம் அதற்கு மேல். அவர்களே குடுமிப்பிடிச் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களையே பஞ்சாயத்து செய்யக் கூப்பிட்டால். அவர்கள் தான் இந்த பிரச்சினை இந்த அளவிற்கு வந்ததற்கே காரணம் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். கங்குலிக்கும் சேப்பலுக்கும் இடையே சிறிய மனஸ்தாபம் அளவில் இருந்த பிரச்சினையை இவர்கள் தங்கள் சுயநலத்திற்காக ஆளுக்கொரு பக்கமாக இருந்து தூண்டி விட்டதால் தான் பிரச்சினை இந்த அளவிற்கே வந்தது என்கிறார்கள். என்ன செய்ய முடியும் இந்த சாபக்கேடு இந்திய கிரிக்கெட் வாரியம் மட்டுமல்ல உலகில் பெரும்பாலான அதிலும் குறிப்பாக ஆசிய கிரிக்கெட் வாரியங்களில் ரொம்பவும் சகஜமான நிகழ்வாகி விட்டது.

இந்த பழைய ஆட்டக்காரர்கள். எதற்கப்பா வம்பு என்று கருத்துச் சொல்லாமல் ஒதுங்குகிறார்கள். அவர்களை குற்றம் சொல்ல முடியாது. பிற்காலத்தில் ஏதாவது பதவி கிடைப்பதற்கு கிடைக்கும் வாய்ப்பை தாங்களே இழக்க அவர்கள் முட்டாள்களா என்ன ?
மொத்தத்தில் ஒன்று மட்டும் தெளிவாகி விட்டது. இப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிலை புலி வாலைப் பிடித்த கதையாகி விட்டது. அது ஏதோ ஒரு ஆசையில் கிரேக் சேப்பலைப் போட்டுவிட்டு, இப்போது அவரைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் விழிக்கிறது.

எப்படியானாலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதுவரை இதைவிட பெரிய கேலிக் கூத்துகளையெல்லாம் கண்டிருக்கிறார்கள். அதனால் இன்னும் கொஞ்ச நாளில் இதுவும் கடந்து விடும், அடுத்த உலகக் கோப்பைக் கனவுடன் மீண்டும் தூங்கப் போகலாம் வாருங்கள்.

No comments: