Wednesday, November 12, 2008

மரணமில்லாப் பெருவாழ்வு

மரணமில்லா பெருவாழ்வு வேண்டி ஃபெங் சூய் மாஸ்டர் ஒருவரின் பேரில் 13 பில்லியன் டாலர் சொத்தினை உயில் எழுதி வைத்திருக்கிறார் ஆசியாவின் பணக்கார பெண்மணி.

சினாசெம் என்கிற ரியல் எஸ்டேட் சாம்ராஜ்யத்தின் முன்னாள் அதிபரான இந்த நினா வாங் என்கிற அம்மணி, தனக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்ட பின், 2006 இல் தனது உயிலை மாற்றி எழுதினார்.

2002 இல் இவர் தனது உயிலை எழுதும்போது சொத்துக்களை தனது குடும்பத்தினருக்கும் அறக்கட்டளைக்கும் எழுதி வைத்திருந்தார். அதனை 2006 இல் மாற்றி எழுதினார். அம்மணிக்கு அவரது கணவரின் மர்மமான மரணம் மூலம் சொத்து வந்தது என்பது ஒரு தனிக்கதை.

அம்மணி சென்ற வருடமே காலமாகி விட்டார்.

இந்த குரு (மாஸ்டர்) தான் அவருக்கு மரணமில்லா வாழ்வு அல்லது நீண்ட வாழ்வு கொடுப்பதாகக் கூறி, தனது பெயருக்கு அவரை சொத்துக்களை மாற்றி எழுதச் செய்திருப்பதாக இப்போது அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.

செய்தி இங்கு:
http://economictimes.indiatimes.com/News/News_By_Industry/Asias_richest_woman_gave_away_fortune_in_return_for_eternal_life/articleshow/3698157.cms

இந்த செய்தியின் மூலம் நாம் புரிந்து கொள்வது:

மூடநம்பிக்கைகளும், அதனை புத்திசாலித்தனமாக குருக்களும், சாமியார்களும் பயன்படுத்திக் கொள்வது என்பதும் உலகமெங்கும் காணக் கிடைக்கிறது. (நம்மூரில் சமுதாயப் புரட்சி பற்றி நீட்டி முழங்குபவர்களும் கூட ராகு காலம் பார்த்து மனு தாக்கல் செய்வதும், பெயர் மாற்றம் செய்து கொள்வதும், ஆஸ்தான ஜோசியர்களின் அட்வைஸ்களை அடியொற்றி நடப்பதும் நமக்கு பழக்கமாகி விட்ட விஷயம்.)

13 பில்லியன் டாலர் என்பது நெதர்லாந்து நாடு, மூழ்கும் தனது வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்களைக் காப்பாற்ற ஒதுக்கியிருக்கும் 'மீட்பு தொகுப்பு' தொகை. இது எத்தனை தனிநபர்கள் வசம், முதலில் நினா வாங்கின் கணவர், அப்புறம் நினா வாங், இப்போது அந்த மாஸ்டர் என்று விளையாடிக் கொண்டிருக்கிறது. (இது அந்த உயிர்களின் பாதுகாப்பை எந்த விதத்தில் சேதப்படுத்தியதோ தெரியவில்லை). உலக மக்கள் தொகையான 650 கோடி பேரில் சுமார் 93 கோடி பேர் பசியுடன் உறங்கச் செல்கிறார்கள் என்று அமைப்புகள் அறிக்கை விட்டுக் கொண்டிருக்க, பணமோ இப்படி தனிநபர் பதுக்கலில் சிக்கி அந்த ஆசாமிகளை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருந்தால், லெனினும் மார்க்ஸும் தனிநபர் சொத்துடைமை ஒழிப்புக்காக கொதித்தார்கள் என்றால், "தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" என்று பாரதி கொதித்தார் என்றால், எப்படி கொதிக்காமல் இருப்பார்கள்.

1 comment:

Vi said...

உண்மை தான். சர்வதேச அளவில் மூட நம்பிக்கைகள் மலிந்து கிடக்கின்றன என்பதற்கு இதுவொரு உதாரணம்.