"சிங்கப்பூர்" நம்மூர் அரசியல்வாதிகள் நமது மக்களை ஏமாற்றுவதற்கு எப்போதுமே உச்சரிக்கும் ஒரு நாடு. மதுரையில் எம்பி தேர்தலில் நின்ற சுப்பிரமணியசாமி தான் வெற்றி பெற்றால் மதுரையை சிங்கப்பூராக மாற்ற வாக்குறுதியளித்ததும், ஒருவேளை அரசு கெஜட்டில் பெயர் மாற்றப் போகிறாரோ என்று பாமர வெகுஜனம் திகைத்ததும் வரலாறு.
உலகமெங்கும் பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடும் சூழ்நிலையில், தொழிலாளர்களுக்கு சம்பள வெட்டும் வேலை இழப்பும் அன்றாட செய்திகளாகி வருகின்றன. நம்நாட்டு அமைச்சர்கள் எல்லாம் சம்பள வெட்டை நிலைமை உணர்ந்து சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று பணியாளர்களுக்கு உபதேசித்து வருகிறார்கள். இதே மாதிரியான ஒரு சூழ்நிலையை சிங்கப்பூர் அரசியல் நிர்வாகம் கையாளும் தன்மை இங்கு குறிப்பிடத்தக்கது.
அந்த நாட்டின் பிரதமரே தனது சம்பளத்தில் 19% வெட்டுக்கு சம்மதித்திருக்கிறார். இந்த ஆண்டு 2.46 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பளமாக பெறும் லீ ஸென் லூங் அடுத்த ஆண்டு 1.99 மில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே சம்பளமாகப் பெறுவார். அந்த நாட்டு அமைச்சர்களும் உயர் அரசு அதிகாரிகளும் 11 சதவீதம் முதல் 19 சதவீதம் வரையான சம்பளவெட்டினை எதிர்கொள்ள இருக்கிறார்கள். அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் இவ்வாறாக நெருக்கடியை எதிர்கொள்வதிலும் தலைமை தாங்கி செல்லும் போது, மக்கள் அவர்கள் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு இயல்பாகவே ஒரு நியாயம் பிறப்பது சரிதானே!
நமது நாட்டு 'உபதேச' அமைச்சர்களுக்கும், குறிப்பாக சட்டமன்றம் கூடிய உடனே முதலில் மைக் பிடித்து "எங்களுக்கு அம்பாஸடர் கார் வேண்டாம், ஸ்கார்பியோ அல்லது சபாரி கார் தான் வேண்டும்" என்று கோரும் நம்ம ஊர் எம்எல்ஏக்களுக்கும் சிங்கப்பூர் 'செய்தி' உறைக்குமா?
1 comment:
Thats why Singapore stands apart.. Well, thats an act of serious honesty. Such a thing wont happen at India in the near future.
Post a Comment